யாழ்ப்பாணம் மல்லாகத்தில் பதற்றம்

மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி- பொலிஸாருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பொலிஸார் மதுபோதையில் இருந்தாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2018 ஜூன் 17 23:29
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 15:11
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்னுமொரு இளைஞன் காயமடைந்துள்ளார். மல்லாகம் சகாயமாதா கோவிலுக்குச் சமீபமாக இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான காரணங்களும் இன்றி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறிய மக்கள், வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாளில் கலந்துகொள்ள வந்த மக்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராச சுதர்ஸன் என்ற இளைஞனே கொல்லப்பட்டதாக மல்லாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி ஜூட்சன் உத்தரவு. சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் ஏழாலை, குளமங்கால் பிரதேசங்களைச் சேர்ந்த இஞைர் குழுக்கள், வாள்களுடன் மோதியதாகவும் அதனைத் தடுக்கச் சென்ற பொலிஸாரின் துப்பாக்கியை இளைஞர் ஒருவர் பறிக்க முற்பட்டதால், துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டது எனவும் மல்லாகம் பொலிஸார் கூறினர்.

இளைஞர் குழுக்கள் வாள்வெட்டில் ஈடுபட்டமைக்கான இரத்தக் கறைகள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் பொலிஸார் ஊடகங்களுக்கு குறிப்பிட்டனர்.

ஆனால், அவ்வாறு வாள்வெட்டுச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் பொலிஸார் திட்டமிட்டமிட்டே துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் சகாய மாதா கோவில் பெருநாளுக்கு வந்த மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய 4534 என்ற இலக்கமுடைய பொலிஸ் அதிகாரி, மதுபோதையில் இருந்தாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இரவுநேரம் என்பதையும் பொருட்படுத்தாமல், மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், இலங்கை விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை இராணுத்தினரும் பொருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களின் போராட்டத்தினால், மல்லாகம் காங்கேசன்துறை வீதியூடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிககிச்சை பெறுகின்றார். இதேவேளை, இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்திற்கு நேரில் வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், சம்பவத்தை நேரில் கண்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துள்ளார்.

அதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து இலங்கைப் பொலிஸார் நடத்தவுள்ள விசாரணைகளில் நம்பிக்கை இல்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியயோர் மீதும், யாழ். கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு எதிராக மாணவர்களும் பொது அமைப்புக்களும் இலங்கைப் பெலிஸாரை கண்டித்து போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மோ மதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில், இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் தமிழர் பிரதேசங்களில் தமது ஆதரவுடன் ஆயுதக் குழுக்களை பயன்படுத்தி கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக, பல்கலைக்கழக மாணவர்களின் கொலையை கண்டித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியிருந்தார்.

இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழர்தாயகப் பிரதேசங்களில் வாள்வெட்டுக் குழுக்கள் செயற்படுவதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இலங்கை இராணுவத்தினர், தமிழர் தாயக பிரதேசங்களில் சிவில் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும், அங்கு நடபெறுகின்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னால். இராணுவத்தினர் செயற்படுவதாகவும் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது கூறியிருந்தார்.

யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பிரதேசத்தில், சட்டவிரோதமாக மணல் ஏற்றச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, 24 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த ஆண்டு யூலை மாதம் 9 ஆம் திகதி இலங்கைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

யாழ். குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பகுதியில் உடுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான சிவபாதசுந்தரம் என்பவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இலங்கைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.