தமிழர் தாயகத்தில்

வன்முறைகள், முரண்பாடுகளை உருவாக்கி மக்களைத் திசை திருப்பிவிட்டுக் காணிகள் அபகரிப்பு- சிறீநேசன்

நல்லிணக்கம் என்று கூறிக் குழப்புவதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஜூலை 17 10:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 17 15:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் காணிகள் பலவற்றை இலங்கை ஒற்றையாட்சி அரசின் வனலாக, வன ஜீவராசிகள் திணைக்களங்களினாலும் பொதுக் காணிகள் புனிதத் தலங்களுக்கான நிலம் என்ற அடையாளங்களோடும் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் கூறியுள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கம் நல்லிணக்கம் என்று கூறக்கொண்டு, தமிழ் மக்களிடையே முரண்பாடுகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறு முரண்பாடுகளையும் வன்முறைகளையும் உருவாக்கி மக்களைத் திசைதிருப்பிவிட்டு, வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில், இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுக் காணிகளை இலங்கை அரச காணி என்று சொல்லுகின்றார்கள், மகாவலிக் காணி என்கிறார்கள், எல்.ஆர்.சீ நிலம் என்றுவேறு கூறுகின்றார்கள். இதைவிட வன பரிபாலன திணைக்களத்தின் காணி என்றும் சொல்கிறார்கள், வன ஜீவராசிகளுக்குரிய நிலம் எனவும் வகைப்படுத்துகின்றனர்.

அதுமட்டுமல்ல, புனித நிலம் என்றுகூட பல நிலங்கள் இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடணப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியா
தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம்

2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் காணி பொலிஸ் அதிகாரங்களைப் பற்றிப் தமிழர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், மைத்திரி- ரணில் அரசாங்கம் அதைப் பற்றிக் கவலையேபடாமல் தமிழர் தாயகக் காணிகளை, இலங்கைப் படைகளின் ஒத்துழைப்புடன் ஒவ்வொருநாளும் ஏதோவொரு வழியில் அபகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது எனவும் சிறிநேசன் நேற்றுத் திங்கட்கிழமை மட்டக்களப்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, முல்லைத்தீவில் 80 ஆயிரம் ஹெக்ரேயர் காணிகள் இலங்கை அரச திணைக்களங்களினால் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, இலங்கை அரச வர்தமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை வவுனியாவில் 2009 ஆம் ஆண்டு மேமாதத்திற்குப் பின்னரான காலம் முதல் இன்றுவரை ஆயிரத்தி 775.93 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வவுனியா மாவட்டச் செயலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் ஆயிரத்தி 788.3 ஏக்கர் பொதுக் காணிகளும் தனியாருக்குச் சொந்தமான 135 ஏக்கர் காணிகளோடு பத்தாயிரத்தி 923.67 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்திடம் 2014 ஆம் ஆண்டு இறுதிவரை இருந்தாகவும் வவுனியா செயலகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஆனாலும் வவுனியா உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கைப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய சரியான புள்ளிவிபரங்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.