வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம்

திருகோணமலையை அடுத்து மன்னாரில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் பூகோள அரசியல் வியூகத்திற்கு ஏற்ற திட்டம்
பதிப்பு: 2018 ஒக். 11 07:22
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 12 23:18
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான மன்னார் நகரில் வரலாற்றில் மிகப் பெரியளவில் முதல் தடவையாக இலங்கை இராணுவம் அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதனால் மன்னார் நகரெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவத்தினரின் 69 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை இந்த அணி வகுப்பு இடம்பெற்றது. வடபுல மாவட்டமான மன்னார் தள்ளாடி பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினரின் 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அணிவகுப்பு பேரணி இடம்பெற்றது. இந்த அணி வகுப்பு புகையிரத நிலைய வீதியில் ஆரம்பித்து மன்னார் பஸார் வீதி ஊடாக தள்ளாடி இராணுவ முகாமை சென்றடைந்தது. இதனால் தமது சொந்த அலுவல்களுக்காக நகருக்கு வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
 
இந்த அணிவகுப்பு எதற்காக என்றும் மக்கள் தமக்குள் பேசிக்கொண்டனர். இலங்கை இராணுவத்தின் இவ்வாறானதொரு பாரிய அணி வகுப்பு மன்னார் வரலாற்றிலே இதுவரை நடைபெறவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர். பெருமளவு மக்களும் வீதியோரமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

இந்த அணிவகுப்பை முன்னிட்டு மன்னார் நகரில் பெரும் எண்ணிக்கையான இலங்கைப் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இலங்கை இராணுவத்தினரின் 69 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட குறித்த அணிவகுப்பு ஊர்வலத்தின் போது சுமார் 800 இற்கும் அதிகமான இராணுவ சிப்பாய்கள் 70 இற்கும் அதிகமான உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பூகோள அரசியலை சாதகமாக்கி, அபிவிருத்தி என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்கள் மீது போர் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரை நடத்தும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இலங்கையில் மைத்திரி- ரணில் ஆண்டாலும் சரிதான் ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான் என்பது அவதானிகள் கணிப்பு.

மன்னார் தள்ளாடியில் உள்ள இலங்கை இராணுவத்தினரின் 54 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது.

இந்த அணி வகுப்பு நிகழ்வை முன்னிட்டு மன்னார் நகரில் கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய தினங்களில் சிரமதான பணிகளையும் இராணுவத்தினர் மேற்கொண்டனர்.

ஆனால் பொருளாதார, இராணுவ வியூகத்தின் பின்னணியிலேயே இந்த சிரமதானப் பணியும் அதன் பின்னரான அணி வகுப்பும் இடம்பெற்றுள்ளது. மக்கள் குழப்பமடையக் கூடாது என்பதற்காகவே சிரமதானப் பணி என கூறப்பட்டது.

மன்னார் முள்ளிக்குளத்தில் நிரந்தரமாக இலங்கைக் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்கு பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

பள்ளிமுனையில் இருந்தும் இலங்கைப் படையினர் வெளியேற மறுக்கின்றனர். தலைமன்னார் பிரதேசத்தில் கொழும்பை மையப்படுத்திய சர்வதேச கம்பனிகளுக்கு காணிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் கொழும்பை மையப்படுத்திய பாரிய தனியார் நிறுவனங்களுக்கு காணிகள் விற்பனைக்கு அல்லது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வடமாகாணம் முல்லைத்தீவில் இருந்து கிழக்கு மாகாணம் திருகோணமலை வரையான ஈழத் தமிழர்களின் கடற்பகுதியில் தற்போது அமெரிக்க நிறுவனம் ஒன்று எண்ணெய்வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கான ஒப்பந்தத்தைக் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இலங்கை பெற்றோலிய வள அமைச்சர் அர்ச்சுண ரணதுங்கவுடன் குறித்த அமெரிக்க நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

அதேபோன்று மட்டக்களப்பு - பெரிய புல்லுமலையில் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்து வந்த தமிழ் உணர்வாளர் கடந்த செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

இதன் அடிப்படையிலேதான் இந்தியாவின் நரேந்திர மோடி அரசின் ஒப்புதலோடு திருகோணமலைத் துறைமுகம் கூட அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையில் அமெரிக்காவின் செல்வாக்குக் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி உறுப்பினர் ஹந்துந் நெத்தியும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு - பாசிக்குடாவில் தமிழ் மக்களுக்குச் செந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்று அங்கு சுற்றுலா விடுதியை அமைத்துள்ளது.

இதே நடைமுறையில் வடமாகாணம் மன்னார் மாவட்டத்திலும் இலங்கை அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக மன்னார் முசலி பிரதேசத்தில் இருந்து மறிச்சுக்கட்டி வில்பத்து ஊடாக புத்தளம் வரை வீதியமைக்கும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூலமாக குறிப்பிட்ட சில குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் பௌத்தகுருமாரின் எதிர்ப்புக்களினால் தற்காலிகமாக வில்பத்துக் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும் மன்னாரில் இருந்து பாரிய வீதியமைக்கும் திட்டம் வரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்திய நிறுவனம் ஒன்றுடன் அதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் உயர் மட்டத்தகவல்கள் கூறுகின்றன.

கடந்த மூன்று மாதங்களில் இரண்டு தடவை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னாருக்குச் சென்று வந்தார். கடந்த ஐந்தாம் திகதி மன்னாருக்குச் சென்ற மைத்திரிபால சிறிசேன, அங்கு மன்னாரில் உள்ள படை உயர் அதிகாரிகளைச் சந்தித்திருந்தார்.

சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கை மீது திணிக்கும் அரசியல், பொருளாதாரத் திட்டங்கள், ஈழத் தமிழர்களி்ன் இறைமைக்கு மாத்திரமல்ல இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து என்பதும் அவதானிகளின் மற்றுமொரு கணிப்பு.

எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் மன்னாருக்குச் செல்லவுள்ள மைத்திரிபால சிறிசேன, அங்கு முஸ்லிம்களின் சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார். பின்னர் டிசம்பர் மாதம் மன்னாரில் நடைபெறவுள்ள மிகப்பெரிய நத்தார் பண்டிகை நிகழ்விலும் மைத்திரிபால சிறிசேன பங்குபற்றுவார் என்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த இரு பயணங்களின்போதும், மன்னாரை ஊடறுத்து கொழும்பு, மற்றும் கிழக்கு மாணம் ஆகிய பிரதேசங்களுடன் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய வீதி அபிவிருத்தி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு காணிகளை கையளித்தல் போன்றவை குறித்து மாவட்ட உயர் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடுவார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே திருகோணமலையை அடுத்து மன்னாரை நோக்கி இலங்கை அரசு என்ற கட்டமைப்பு. இந்திய. அமெரிக்க அரசுகளின் யோசனைகளுக்கு அமைவாக இந்த பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பூநகரி - சங்குப்பிட்டிப் பாலம் யாழ்ப்பாணம் - மன்னார் ஆகிய மாவட்டங்களை தொடர்புபடுத்தி செய்யப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் பின்னர் அதனை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் மற்றும் அரச காணிகளும் தற்போது இலங்கை நில அளவைத் திணைக்களத்திளால் அளவீடு செய்யப்படுகின்றன.

அதன் பின்னர், கொழும்பை மையப்படுத்திய சர்வதேசக் கம்பனிகளுக்கு அந்தக் காணிகள் நீண்டகால குத்தகைக்கு விடப்படலாம் என கொழும்பில் இலங்கை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை அரசின் இவ்வாறான பொருளாதார. இராணுவ வியூகங்களின் அடிப்டையிலேயே தமிழர் தாயகப் பகுதிகளில் காணி அபகரிப்பு, புத்தர் சிலை வைப்பது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த செயற்பாடுகளின் மூலம் மக்களைத் திசை திருப்பி தமது பொருளாதார, இரணுவ வியூகங்களை தடையின்றி செய்து முடிக்கலாம் என இலங்கை அரசு கருதுகின்றது.

வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு போன்ற கடற்பிரதேசங்களில் சிங்கள மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி கொடுத்து அதன் மூலம் தமிழ் சிங்கள மீனவர்களை மோதவிடுவதும் மற்றுமொரு திட்டமாகவுள்ளது.

ஏனெனில், தற்போது முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை வரையான கடற்பகுதியில் அமரெிக்க நிறுவனம் மேற்கொண்டுவரும் எண்ணெய்வள ஆய்வுக்கு வசதியாக அந்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளைக் கூட வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கத் திட்டமிடப்படுகின்றது.

இது குறித்து கொழும்பு முகத்துவாரம் மீனவர் சங்கப் பிரதிநிதியொருவர் ஏலவே சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

ஆகவே, இந்தப் பின்னணியிலேதோன் திருகோணமலையை அடுத்து தற்போது மன்னார் பிரதான இலக்காக மாறியுள்ளதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பதை விட வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிப்பதன் மூலம் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை உடைக்கலாம் என்பது, இங்கு பிரதான இலக்கு.

சிங்களக் குடியேற்றங்கள் புத்தர் சிலை வைத்தல் போன்றவற்றின் மூலம், வடக்கு கிழக்கை இணைக்கும் திருகோணமலை. முல்லைத்தீவு உள்ளிட்ட மன்னார் பிரதேசங்களின் நிலங்கள் துண்டாடப்படுவதற்கும் இதுவே காரணம்.

2009 ஆம் ஆண்டு இன அழிப்புப் போருக்கு உதவியளித்த, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் தமது பூகோள அரசியல் பொருளாதார நலன்சார்ந்து இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு தொடர்ந்து உதவியளித்து வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் பூகோள அரசியலை சாதகமாக்கி, அபிவிருத்தி என்ற பெயரில் ஈழத் தமிழ் மக்கள் மீது போர் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போரை நடத்தும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இலங்கையில் மைத்திரி - ரணில் ஆண்டாலும் சரிதான் ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தாலும் ஒன்றுதான் என்பது அவதானிகள் கணிப்பு.

இந்த நாடுகளுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமக்குரிய அரசியல். பொருளாதார நலன்கள் மாத்திரமே. இந்த அடிப்படையிலேதான் இந்து மா சமுத்திரத்தின் ஆதிக்கம் யாருக்கு என்ற தொனியில் கொழும்பில் சா்வதேச பாதுகாப்பு மாநாடு ஒன்றும் இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் நடத்தப்படுகின்றது.

சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அமெரிக்கா, இந்தியா. ஜப்பான போன்ற நாடுகள் இலங்கை மீது திணிக்கும் அரசியல், பொருளாதாரத் திட்டங்கள், ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து என்பதும் அவதானிகளின் மற்றுமொரு கணிப்பு.