ஈழத்தின் யாழ்ப்பாணத்தில்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அனுட்டிப்பு - இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை என விசனம்
பதிப்பு: 2018 ஒக். 19 23:00
புதுப்பிப்பு: ஒக். 19 23:09
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழ் மக்களது இன்னல்களை பேனாமுனையால் வெளியுலகிற்கு தெரியப்படுத்திய துணிச்சலான ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் அனுட்டிக்கப்பட்டது. பேனா முனையால் மக்களின் குரலாக எதிரொலித்த நிமலராஜனது நினைவேந்தல் யாழ் ஊடக அமையம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மாநகர மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இன்று பிற்பகல் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
அதன் பின்னர் யாழ் ஊடக அமையத்தில் மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி.ரகுராம், ஊடக கற்கை விரிவுரையாளர்கள், மாணவர்கள் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை, ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நடைபெற்றது.

யுத்தத்தின் உச்சம் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், தமது உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் குரலாக யாழ்ப்பாணத்திலிருந்து தற்துணிவுடன் செய்திகளை வெளிக்கொணர்ந்தவர் நிமலராஜன்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையிலுள்ள அவரது வீட்டில் வைத்து அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு ஊடகவியலாளர் நிமலராஜன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

நிமலராஜனின் வீட்டின் ஜன்னலினூடாக இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தான் எழுதிய கட்டுரை மீது இரத்தம் வடிய நிமலராஜனின் உயிர் பிரிந்தது.

ஐந்து தடவைகள் துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொண்ட இரு ஆயுததாரிகள் நிமலராஜனின் தந்தையையும் கத்தியால் தாக்கி விட்டு கைக்குண்டை வீசியவாறு தப்பிச் சென்றிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் நிமலராஜனின் தந்தை, தாய் உட்பட மருமகனும் காயமடைந்தனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில், அதியுயர் பாதுகாப்பு பகுதிக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதம் நுழைந்தது எவ்வாறு என்ற சந்தேகம் இன்றுவரை மக்கள் மத்தியிலுள்ளது.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்காளாகியும் சூத்திரதாரிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

மிக இறுக்கமான இக்கட்டான இராணுவ நெருக்கடி காலத்திலும் நிமலராஜனின் துணிச்சலான பயணம் பல உண்மைகளை உலகின் முன் ஒப்புவிக்க வழிகோலியது.

1995 ஆம் ஆண்டு வலிகாமம் இடப்பெயர்வை அடுத்து மீண்டும் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருந்த காலம் அது. மீளக் குடியமர்வதற்காக சொந்த நிலங்களுக்கு மக்கள் வந்துகொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தாலும் இராணுவப் புலனாய்வாளர்களாலும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களாலும் காட்டிக்கொடுக்கப்பட்டு சொல்லெணாத் துயரத்தை அனுபவித்துவந்தனர்.

இவற்றையெல்லாம் நிமலராஜனின் பேனா முனை எழுதத் தவறவில்லை. உண்மை வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இந்தத் தேசத்திலே தயங்காமல் செய்தி சொன்ன ஊடகவியலாளர்களுள் நிமலராஜனும் முதன்மையானவர்.

முரசொலிப் பத்திரிகையில் அச்சிடல் முகாமைத்துவத்தில் இருந்த தந்தையார் மூலம் ஊடகத்தினுள் புகுந்த நிமலராஜன் அன்றாடம் மக்கள் படும் வேதனைகளையும் துன்பங்களையும் நேரில் கண்டு வளர்ந்தவர். இதனால் மக்களின் துயரக் கதைகளை வெளி உலகிற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் இயல்பாகவே எழுந்தது.

சுயாதீனமான ஒரு ஊடகவியலாளனாக இருந்த அவர், மக்களின் பிரச்சினைகளை எந்தெந்த வழிகளில் வெளியுலகிற்கு தெரியப்படுத்த முடியுமோ அவ்வாறெல்லாம் இதனை வெளியில் கொண்டுவந்தார்.

பிபிசியின் தமிழ் சேவையான தமிழோசை மற்றும் சிங்கள சேவையான சந்தேசிய மற்றும் உள்நாட்டில் வீரகேசரி உள்ளிட்ட நாளிதள்கள் போன்றவற்றில் நிமலராஜனின் எழுத்தும் குரலும் ஆயிரம் பல கதைகளைக் கூறின.

பல வழிகளிலும் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் கேள்விக்கு உள்ளாகியிருந்த அந்தக் காலத்தில் இலங்கையின் ஏனைய பாகங்களில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தில் அணுவணுவாய் அரங்கேறிய படுகொலைகளையும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களையும் ஊடகங்களின் ஊடாக உலகுக்கு தெரிவித்தார் நிமலராஜன்.

இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத தமிழினத்திற்கு எதிரான சக்திகள் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி நிமலராஜனை இவ்வுலகை விட்டு கொன்றொழித்தார்கள்.