காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்

மைத்திரிபால, கோட்டபய ஆகியோரையும் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? சிவில் சமூக அமைப்புகள் கேள்வி

அழுதுபுலம்பும் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ளுமாறும் வலியுறுத்தல்
பதிப்பு: 2018 ஜூலை 15 18:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 15 23:59
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகத்தில் இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது, இலங்கையின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என்று சிவில் சமூக அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலக பிரதிநிதிகளிடம் சிவில் சமூக அமைப்புகள் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தன. இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்த வந்திருந்தனர்.
 
அப்போது கேள்வி எழுப்பிய சிவில் சமூக அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமே இல்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறிவிட்டார் எனவும், இந்த நிலையில் உங்களால் எப்படி விசாரணை நடத்திக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பெறமுடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

ஆனால், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபயவையும் விசாரணைக்கு உட்படுத்த முடியும் என அந்த அலுவலகத்தின் பிரதிநிதிகள் பதிலளித்துள்ளனர்.

எனினும், மைத்திரிபால சிறிசேனவையோ, கோட்டபயவையோ அல்லது இலங்கைப் படை உயர் அதிகாரிகளையோ எவரையும் உங்களால் விசரணைக்கு உட்படுத்த முடியாது என்றும், அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தினாலும் அந்த விசாரணையில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் சிவில் சமூக அமைப்புகளும் பதிலுக்குக் கூறியுள்ளன.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை அறியும் அலுவலக பிரதிநிதிகளின் விசாரணை நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், அழுதுபுலம் மக்களின் மன நிலையை புரிந்து செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளன.

யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரான காலத்திலும் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி, சென்ற வியாழக்கிழமை கொழும்பில் கவனயி்ர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்தின்படி காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் கடந்த பெப்ரவரி மாதம் முதல் கொழும்பை மையப்படுத்தி செயற்பட்டு வருகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களுக்கு இந்த அலுவலகத்தின் பிரதிநிதிகள் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக கொழும்பில் இருந்து வரும்போதும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டு, இந்த அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என்றும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.