மஹிந்தவின் ஆட்சியில் மட்டக்களப்பில்

அரசியல் நோக்கத்துக்கான அபிவிருத்தித் திட்டங்களினால் பெருமளவு ஊழல் மோசடி- பழச் செய்கையாளர்கள்

மைத்திரி- ரணில் ஆட்சியிலும் உருப்படியாக எதுவுமேயில்லை
பதிப்பு: 2018 ஜூலை 15 19:52
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 16 16:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அரசியல் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பழச்செய்கையானது, மஹிந்தவினுடைய அரசியல் ஆதரவாளர்களுக்குத் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டிருந்தன. இதனால் இதுவரையும் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையவில்லையென பழத்தோட்டச் செய்கையில் ஈடுபட்டுள்ள நடராசா தெரிவித்தார். 2013ம் ஆண்டு கோறளைப்பற்று தெற்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவான் 211டீ கிராம சேவகர் பிரிவில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து ஆரம்பிக்கப்பட்ட பழச் செய்கைத் தோட்டம் தற்போது காடாகியுள்ளது.
 
பிரதேச செயலகத்தினால் வாழ்வாதாரத்தில் பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் படி 25 ஏக்கரில் பழச் செய்கைக்காக கொய்யா, மாதாள, மா, தோடை, வாழை, போன்ற பழக்கன்றுகள் வழங்கப்பட்டிருந்தன.

நீர்த்தாங்கியில் நீர் ஏற்றுவதற்கான இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் இப்பண்ணைக்கு வருகைதந்து கிருமிநாசினி தெளிக்கும் தெளிகருவி வழங்கியிருந்தார். ஆனால் அந்தக் கருவியும் காணாமல் போய்விட்டது- பழச் செய்கையாளர்கள்.

ஆனால் அரசியல் தலையீடு மற்றும் சில ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் காரணமாகவும் பயனாளிகள் தெரிவிலும் மோசடி இடம்பெற்றுள்ளது.

மண்ணுக்குப் பொருத்தமான பயிரினங்கள் தெரிவு செய்யப்படாமையினால் வாழைச் செய்கையானது வெற்றியளிக்கவில்லை. அதிகாரிகளினால், இப்பழச் செய்கை கண்காணிக்கப்பட்டு ஆலோசணைகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், எதுவும் சரியாக நடைபெறவில்லை.

நீர்த்தாங்கியில் நீர் ஏற்றுவதற்கான இயந்திரங்கள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகள் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் முறையிடப்பட்டுள்ளது.

இதனைவிடவும், பெரிய தண்ணீர்த்தாங்கி 2, விவசாயக் கிணறு 04, மரக்கன்றுகளை கத்தரிக்கும் கத்தரிகோள், பொதி செய்யும் இயந்திரம், தெளிகருவி, சுற்றிவர வேலி போடப்பட்டு, வாட்டர்பம், மின்சாரத்தில் இயங்கும் நீர்ப்பம்பி மற்றும் பாதுகாவலர் அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டும் மக்கள் உரிய முறையில் நன்மையடையவேயில்லை.

வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் இப்பண்ணைக்கு வருகைதந்து கிருமிநாசினி தெளிக்கும் தெளிகருவி வழங்கியிருந்தார். ஆனால் அந்தக் கருவியும் காணாமல் போய்விட்டது.

அதேவேளை, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் இப்பழத் தோட்டத்திற்கு மின்சாம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், பழச் செய்கைக்கென வழங்கப்பட்ட விவசாய உபகரணங்கள் இருக்குமாயின் நீர் உட்பட அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இன்று பயிரினங்கள் நீரின்றி அழிவடைந்துவருவதாக அவர் தெரிவித்தார்.

தோட்டத்தில் குடியிருக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆதரவாளரை விசாரணை செய்வதன் மூலம், இப்பழச் செய்கைக்காக வழங்கப்பட்ட அனைத்து உபகரணங்களையும் மீளபெற்றுக் கொள்ள முடியும் என்றும் நடராசா தெரிவித்தார்.

அதேவேளை, யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் நன்மையடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இப்பாரிய பழத் தோட்டச் செய்கையானது, மீண்டும் புத்தூயிர் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் இக்காணிகளை சகோதர இனத்தவர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையையும் தடுக்க வேண்டும் என பழச் செய்கையில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.