இலங்கை இராணுவ உயர் அதிகாரிக்கு எதிரான வழக்கு

விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல், ஆறு வயது மகனுக்கும் காயம்- முறைப்பாட்டை ஏற்கப் பொலிஸார் மறுப்பு

இலங்கைப் புலானாய்வாளர்கள் பிரசன்னம்- சட்டத்தரணிகள் எதிர்ப்பு
பதிப்பு: 2018 ஜூலை 15 22:01
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 15:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு இலங்கைப் படையினரால் 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தெடர்பான மனுவைத் தாக்கல் செய்வதற்கு, உதவியளித்த பெண்ணும் அவரது ஆறு வயது மகனும் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றுச் சனிக்கிழமை மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இந்த வழக்கி்ன் முதலாவது எதிரியாகவுள்ள நிலையில் உதவியளித்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


 
இலங்கை ஜனாதிபதிபதியாக சந்திரிக்கா பதவி வகித்தபோது, துமிந்த கெப்பிட்டிவலன்ன, நாவற்குழி முகமுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்தார். யாழ்ப்பாணத்தில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்த வழக்கில், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முதலாவது எதிரியாக யாழ் மேல் நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு கடந்த மாதம் பதவி உயர்வும் வழங்கப்பட்டிருந்தது.

இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டதால், இந்த வழக்கு விசாரணையும் கைவிடப்படலாம் அல்லது கொழும்புக்கு மாற்றப்படலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும், பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்த நிலையிலும் இந்த வழக்கு சென்ற பத்தாம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் கூடுதலாக நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர். இது மனுதாரர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அமைந்தாக சட்டத்தரணி குமாரவேல் குருபரன் நீதிமன்றில் கூறியுமிந்தார்.

அத்துடன், மனுதாரர்களுக்கு வார்த்தைகளினாலும் அச்சுறுத்தும் வகையில் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் செயற்பட்டுமுள்ளனர்.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு உதவி புரிந்த குறித்த பெண் மீது அடையாளம் தெரியாத குழுவினர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றுச் சனிக்கிழமை மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து உறவினர்கள் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு முறையிட்டனர். ஆனால் அந்த முறைப்பாட்டை ஏற்கப் பொலிஸார் மறுத்துவிட்டனர்.

மாறாகக் குறித்த பெண்ணும் ஆறு வயது மகனும் வீதியில் தவறி விழுந்தே காயமடைந்ததாக வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கைப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனால், சிகிச்சை பெறுவதற்காகச் சென்றபோது, யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் முறையிட்டதாக பாதிக்கப்பட்ட பெணின் உறவினர்களில் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் கூறியுள்ளார்.

வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும் அவரது ஆறு வயது மகனுமே தாக்குதலுக்கு இலக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் வீதியால் வந்துகொண்டிருந்த பொது மக்களே கொட்டைக்காடு ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.