இலங்கைப் பொலிஸாரின் ஆதரவுடன்

யாழ். சுழிபுரம் திருவடிநிலை பிரதேசத்தில் மண் அகழ்வு- மடக்கிப்பிடித்ததாக பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர்

கொழும்பு அரசியல் செல்வாக்குகளும் காரணம்?
பதிப்பு: 2018 ஜூலை 17 22:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 17 23:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் பொன்னாலை முதல் மாதகல் வரையான சுமார் எட்டுக் கிலோமீற்றர் நீளமுடைய கடற்கரையோர பிரதேசமாக இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் தமக்குத் தேவையான மணல்களை அகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சுழிபுரம்- திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் பிரதேச இளைஞர்களினால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கைப் பொலிஸாரின் செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை எனவும் பிரதேச இளைஞர்கள் கூறியுள்ளனர்.
 
தமது தேவைக்காக மண்ணை அகழ்ந்து எடுக்கும் இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும், வர்த்தக ரீதியிலான செல்வாக்குடைய சில நபர்கள் மண்ணை அகழ்ந்து எடுக்கும்போது கண்டுகொள்வதில்லை.

பிரதேச அதிகாரிகளின் அனுமதியின்றி கொழும்பு அரசியல் செல்வாக்குடன், இலங்கைப் பொலிஸாரின் ஆதரவோடு மண் அகழ்வு உட்பட, பிரதேசத்தின் வளங்கள் சுரண்டிச் செல்லப்படுகின்றன-- மக்கள் கவலை.

மாறாக, அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பெறுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சுழிபுரம்- திருவடிநிலையில் உள்ள மயானத்தில் சிலர் மண் அகழ்வதாக நேற்று திங்கட்கிழமை மக்கள் முறையிட்டனர்.

அதனையடுத்து வலி.மேற்கு பிரதேச சபை பிரதேச சபைத் தவிசாளர் த.நடனேந்திரன், பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறு உறுப்பினர் து.சுஜிந்தனுக்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் குறித்த நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வரை தொடர்ச்சியாக மிகவும் சுதந்திரமான முறையில் மண்ணை அகழ்ந்து டிப்பர் வாகனங்களில் ஏற்றிச் செல்வதை அவதானித்த காட்டுப்புலம் - பாண்டவெட்டை இளைஞர்கள் மாலை 6.00 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களை கைப்பற்றினர். மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களையும் மடக்கிப் பிடித்தனர்.

இளைஞர்களின் துணிச்சலான செயற்பாட்டை அறிந்த வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ந.பொன்ராசா, செ.கிருஸ்ணராசா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதேவேளை, வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட வழக்கம்பரையில் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தும், அரசியல் செல்வாக்குள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் டிப்பர் வாகனத்திலேயே மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களிலும் இவர்கள் இந்த இடத்தில் மணல் அகழ்ந்தாகவும் இவர்களை மடக்கிப் பிடித்து இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தபோதும், பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டு நீதிமன்றத்தில்கூட முன்லைப்படுத்தாமல் இவர்களை விடுதலை செய்ததாக பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, இலங்கைப் படையினரும் இலங்கைப் பொலிஸாரும் தாயகத்தில் உள்ள வளங்களைச் சுரண்டிச் செல்வதற்காக, கொழும்பை மையப்படுத்திய அரசியல் செவ்வாக்குள்ள பிரதேச வர்த்தகர்கள் சிலரை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

மண் அகழ்ந்து எடுப்படுவதால், பிரதேசத்தின் இயற்கை அழகு சீரழிவதாவும், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு மேலும் மணல் அரித்துச் செல்லப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேச அதிகாரிகளின் அனுமதி இன்றி கொழும்பு அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலும் இலங்கைப் பொலிஸாரின் ஆதரவோடும் மண் அகழ்வு உட்பட, பிரதேசத்தின் வளங்கள் சுரண்டிச் செல்லப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளளர்.

பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள இலங்கைக் கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணம் வலி.மேற்குப் பிரதேச சபையால் செலுத்தப்பட்டு வருவதாகாவும் மக்களின் பணத்தை இலங்கைக் கடற்படைக்கு ஏன் செலவிட வேண்டும் என்றும் சென்ற 11 ஆம் திகதி சபையின் கூட்டத்தில் கேள்வி தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.