இலங்கை அரசாங்கத்தின்

வாழ்வாதார மேம்பாட்டுத்திட்டத்தில் மட்டக்களப்பு நாசிவன்தீவு புறக்கணிப்பு- மீன்பிடிச் சங்கத் தலைவர்

போரினாலும் சுனாமி பேரலையினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவிப்பு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 02 19:57
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 23:16
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும் தமிழ் மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீன்வளர்ப்புத் திட்டத்தை நீரியல் வள அமைச்சின் நிதி உதவியுடன் பிரதேச செயலகம் நடைமுறைப்படுத்தியத் திட்டம் ஒரு சமூகத்தை மாத்திரம் சார்ந்து இடம்பெறுவதாக நாசிவன்தீவு கிராம மீன்பிடிச் சங்கத்தின் தலைவர் ம.தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களை அடையாளப்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கொடுவா மீன் வளர்ப்புத் திட்டத்தில் தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக தவராசா கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.

போர் மற்றும் சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட நாசிவன்தீவு கிராம மக்கள் அபிவிருத்தித் திட்டங்களின்போது கவனிக்கப்படுவதில்லை என கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி கணேஸ்வரன் பரமேஸ்வரி கூர்மை செய்தித் தளத்திற்கு ஏலவே கூறியிருந்தார்.

மீன்வளர்ப்புத் திட்டத்திற்கு உதவியளிப்பதற்காக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் நாசிவன்தீவு கிராமத்தில் வறுமையில் வசிக்கும் மக்கள் தெரிவாகியிருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. எனினும், மக்களின் தொடர் போராட்டத்தின் பயனாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் 10 பேர் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் 20 பேர் அடையாளப்படுத்தப்பட்டு உதவிகள் வழங்கப்படிருந்தன.

அவர்கள் இரு தடவைகள் அறுவடை செய்துள்ளார்கள். சகோதர இனத்தைச் சேர்ந்தவரே இத்திட்டத்திற்கு பொறுப்பாக செயற்படுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ச் சமூகம் திட்டமிட்ப்பட்ட முறையில் ஓரம்கட்டப்படுவதால், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றுவரை பெரும் கஷ்ட்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என தவராசா மேலும் குற்றம் சுமத்தினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வடமேற்காக 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை என பிரதேச செயலாளர் ராஜ்பாபு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.