உரிய தீர்வு கடைக்கும் வரை

கலந்துரையாடல்களை புறக்கணிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகின்றனர் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு

இலங்கை அமைச்சர் முல்லைத்தீவுக்கு பயணம் செய்ய ஏற்பாடு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 07 14:54
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 07 16:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான முல்லைத்தீவு மாவட்ட கடலில் தென்பகுதியில் இருந்து வரும் மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். சிங்கள மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எதிர்ப்பு வெளியிட்டு, சென்ற இரண்டாம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முல்லைத்தீவில் நடத்தியிருந்தனர். தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடும் முல்லைத்தீவு மீனவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
அதேவேளை, மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

ஆனாலும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை நம்பமுடியாதெனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தென்பகுதியில் இருந்து சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வருகை தந்து, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியும் அனுமதி பெறாமலும் முல்லைத்தீவுக் கடலில் தென்பகுதி சிங்கள மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை தொடர்பாக பல்வேறு சந்தப்பங்களில் முறையிட்டதாகவும், ஆனாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக நாளை புதன்கிழமை எட்டாம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மீன சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

காலதாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுப்பது என உறுதியளிக்கப்பட்டால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்களுடனான சந்திப்புக்களில் பங்கு கொள்வது எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா, எதிர்வரும் 12ஆம் முல்லைத்தீவிற்கு நேரடியாக வருகை தருவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

மைத்திரி- ரணில் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த பின்னர் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் அனைத்திலும் சிங்களவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக தாயகத்தில் உள்ள பொது அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.