தமிழர் தாயகத்தில் போரினால்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலம் இலங்கை அரசியல் யாப்புக்கு முரண்- உயர் நீதிமன்றம்

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்- சபாநாயகர்
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 07 23:08
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 08 00:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்குரிய நகல்ச் சட்ட மூலத்தின் சில விதிமுறைகள் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு முரணாகவுள்ளது என்று, இலங்கை அரசின் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த நகல்ச் சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால், இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறப்பட வேண்டும். அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் கூறினார். இலங்கை நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் ஆரம்பமானதும் சபாநாயகர் இந்த அறிவிப்பைச் செய்தார்.
 
இலங்கை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பிரகாரம், இந்த நகல்ச் சட்ட மூலத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டு, இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டதாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையில் அறிவுறுத்தினார்.

தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை இலங்கை உயர் நீதிமன்றமே 2006 ஆம் ஆண்டு தனித்தனியாகப் பிரித்திருந்தது- அரசியல் ஆய்வாளர்கள்.

இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம் ஒன்றை அமைக்கும் குறித்த நகல்ச் சட்ட மூலத்தில் இழப்பீடுகளை வழங்குவதற்கான விதிமுறைகள், ஒரு இனத்திற்கு மாத்திரம் உரியதாக இருப்பதாக மைத்திரி ரணில் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலரும் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி, மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இந்த நகல்ச் சட்டமூலம் இலங்கை அமைச்சரவையிலும் அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. இதனால், இந்த நகல்ச் சட்ட மூலத்தை சபாநாயர் கரு ஜெயசூரிய இலங்கை உயர் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பியிருந்தார்.

அந்தப் பாிசீலனையின் முடிவை இலங்கை உயர் நீதிமன்ற உயர் நீதியரசர்கள், சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியிருந்தனர். அந்த முடிவையே சபாநாயகர் இன்று அறிவித்தார்.

இதனால், தாயகப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை இலங்கை அரசாங்கத்தினால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் இதனால், அந்த அரசியல் யாப்புக்கு உட்பட்ட இலங்கை நீதித்துறையும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட எந்தவொரு நலன்சார்ந்த விடயங்களுக்கும் இடமளிக்காது எனவும் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் ஏலவே கூறியிருந்தனர்.

தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களை, இலங்கை உயர் நீதிமன்றமே 2006 ஆம் ஆண்டு தனித்தனியாகப் பிரித்திருந்ததையும் ஆய்வாளர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.