திராவிட இயக்கத்தின் முன்னோடி

கருணாநிதியின் உடல் மேல் இந்தியத் தேசியக் கொடி- திமுக கொடி கீழே, வரலாற்றை மாற்றியது யார்?

அறிஞர் அண்ணாவின் உடல்மேல் இருந்த இந்தியத் தேசியக் கொடியை அன்று எடுத்து வீசிய கருணாநிதி- இன்று?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 09 01:34
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 15:22
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரும், தமிழ்நாட்டிற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான `கலைஞர்` என்றழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி தனது 94ஆம் வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி வகித்து இறந்தபோது (1969), அவரது உடலின் மேல் போர்த்தப்பட்டிருந்த இந்தியத் தேசியக் கொடியை அகற்றி, அவருக்கு கட்சிக் கொடியை கருணாநிதி போர்த்தியிருந்தார். ஆனால், இன்று கருணாநிதியின் உடல் மீது இருந்த திமுக கொடியின் மேல் இந்தியத் தேசியக் கொடி போர்த்தப்பட்டமை வரலாற்று முரண் என தமிழக ஊடகவியலாளர் ஒருவர் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.
 
மெரினா கடற்கரையில், அறிஞர் அண்ணாவின் கல்லறை வீற்றிருக்கும் பகுதியிலேயே, கலைஞர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய, திமுக சார்பில் எடுத்த முயற்சிக்கு பல்வேறு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி தமிழக அரசாங்கம் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை நீக்கப்பட்ட அண்ணா நினைவு வளாகத்திலேயே நேற்று புதன்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் உடலுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பேனர்ஜி, பாண்டிச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கருநாடகா முதலமைச்சர் குமாரசாமி, உத்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதேவ், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், இந்தியத் துணைக் கண்டத்தின் முன்னாள் பிரதமர் தேவகெளடா, இந்தியத் துணைக் கண்டப் பிரதமர் நரந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்ரிலால் புரோகித், கேரளா மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து இறுதி வணக்கம் செலுத்தினர்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பழம்பெரும் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியத் துணைக் கண்ட அரசு இரு நாட்களும், தமிழக அரசு 7 நாட்களும் அரசு முறை துக்க நாட்களாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்படும்.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் இறுதி வணக்கம் செலுத்தியதோடு, மெரினா கடற்கரை வரையில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிற தமிழக கட்சித் தொண்டர்கள்,என வழியெங்கும் லட்சக்கணக்கானோர் திரண்டு நின்று அவருக்கு பிரியாவிடை அளித்தனர்.

உலகமெங்கும் வாழும் ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வசிப்பவர்களும் கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை நிமித்த இறுதி வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்கள் சந்தித்த இனவழிப்புப் போரின்போது கருணாநிதியின் `மெளனம்` இன்றளவும் வடுவாக நிலைத்து நிற்கின்றது.

தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் இன்றுவரை அவரிள் மௌனத்தை மறக்கவில்லை.

2009ற்கு பின்னரான டெசோ மாநாடு, இனவழிப்புத் தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையில் திமுக சார்பாக ஈழத்தமிழர்களுக்கான நீதி கோரும் மனு கையளிப்பு, ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு என திமுகவும் கலைஞர் கருணாநிதியும் தங்கள் 2009 காலத் தவறை சரி செய்ய முற்பட்டனர்.

எனினும், வருங்காலங்களிலும் ஈழத்தமிழர்களுக்கான தொடர்ச்சியான நீதி மற்றும் உரிமைப் போராட்டங்களில் திமுக தீர்க்கமான ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முன்வரவேண்டும் என்பதே தமிழ்நாடு மற்றும் ஈழத்தில் வாழும் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.