தனிக் குழு ஒன்றை அமைத்து

சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க இலங்கை இராணுவம் ஏற்பாடு- விசேட ஆய்வு நடைபெறும் என்கிறார் தளபதி

மனித உரிமை அமைப்புகள் கவலை
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 11 14:18
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களை (Social Media) தீவிரமாக கண்காணிப்பதற்காக விசேட குழு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், குற்றச் செயல்கள் ஆகியவற்றைத் தடுப்பது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த விசேட குழுவை உருவாக்கியுள்ளதாகவும் இந்தக் குழு ஒவ்வொரு சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் பதிவுகளை அவதானிக்கும் எனவும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது. இந்த மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்புச் செயலமர்வில், சமூக ஊடகங்களும் அதன் நம்பகத் தன்மையும் என்ற தெனிப்பொருளின் கீழ் சிறப்பு ஆய்வு ஒன்றை நடத்தவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.
 
கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி கண்டி திஹன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினபோது சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பபட்டது என்று இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியதன் காரணத்தினால் சமூக வலைத் தளங்களை கண்டி வன்முறைகளின்போது தடை செய்ய நேரிட்டதாக அமைச்சர் ராஜித சேனரட்னவும் அன்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் விசேட குழு ஒன்றை அமைத்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், இது ஒரு கண்காணிப்பு நடவடிக்கை மாத்திரமே என்று மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சமூகவலைத்தளங்கள் ஊடாக குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றமை உண்மைதான் என்று கூறியுள்ள கொழும்பில் உள்ள உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், சமூவலைத்தளங்களைக் கண்காணிக்க சிவில் சேவை அதிகாரிகளை உள்ள்டக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

அந்தப் பொறுப்பை இலங்கை இராணுவத்திடம் கையளிக்க முடியாதென்றும், அவ்வாறு கையளிக்கப்பட்டால், அது சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதாக அமையும் எனவும் அந்த மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

சமூகவலைத்தளங்களை இலங்கை இராணுவம் கண்காணிக்க முற்படுவது தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களை கடுமையாகப் பாதிக்கும் எனவும் முற்றுமுழுதான ஊடக ஜனநாயக மறுப்பாக மாற்றமடையக்கூடிய அபாய நிலை உருவாகும் எனவும் மட்டக்களப்பில் உள்ள ஊடக அமைப்புகள் கூறியுள்ளன.

ஏற்கனவே சிவில் நிர்வாக விடயங்களில் இலங்கை இராணுவம் தலையிடுகின்றது. பிரதான ஊடகங்களைக் கூட இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கண்காணித்தும் வருகின்றது.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களை இலங்கை இராணுவத்தின் விசேட குழு கண்காணி்க முற்படுவது மிகவும் ஆபத்தானது என தமிழர் தாயகப் பிரதேசத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

சமூ கவலைத்தளங்களை இலங்கை சிவில்சேவை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால் இலங்கை இராணுவம் கண்காணிக்க முற்படுவதை ஏற்க முடியாதென உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.