வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு

வெடுக்குநாறி மலைக்குச் செல்லவிடாது தடுத்தன் நோக்கம் என்ன? புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு என மக்கள் சந்தேகம்

இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் மீது சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 12 15:51
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 02 16:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கைத் தொல்பொருட் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்திற்குள் சென்று வருவதற்கு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஏன் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் மைத்திரி- ரணில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை செய்வதுடன் புத்தர் சிலைகளை வைத்து காணிகளை அபகரிப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தைப் போன்றே மைத்திரி- ரணில் அரசாங்கமும் செயற்படுவதாகவும் கூறிய அவர் குறி்ப்பிட்டார்.
 
இலங்கைத் தொல்பொருள் திணைக்களம். இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக தமிழர்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெடுக்குநாறி மலையையும், அங்குள்ள ஆதி ஐயனார் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதியை நெடுங்கேணி பிரதேச மக்கள் மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்துள்ளனர்.

ஆனால் இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மக்களை அங்கு செல்லவிடாது, இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வெடுக்குநாறி மலையை உடைத்து கருங்கல் அகழ்வதற்காக சில குழுக்கள் முற்பட்டபோது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெடுக்குநாறி மலைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக நெடுங்கேணி பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் கூறுகின்றார்.

வெடுக்குநாறி மலை இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் தமது அனுமதியின்றி அங்கு செல்லக் கூடாதென கட்டளையிட்டதாகவும் துரைராசா தமிழ்செல்வன் குறிப்பிட்டார்.

புத்தர் சிலை ஒன்றை வைத்து பெளத்தர்களின் புனிதப் பிரதேசம் என இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் கூறலாம் என்று மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக அங்கு சென்று வந்த மக்கள், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் முறையிட்டுள்ளனர்.