முல்லைத்தீவு நாயாறு

மீனவர்களின் உபகரணங்கள் தீயிடப்பட்டமைக்கு இலங்கைப் படையினரே காரணம்- மீனவர்கள் தெரிவிப்பு

மைத்திரி- ரணில் அரசாங்கம் முரண்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 15 14:55
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 22:37
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தென்பகுதியில் உள்ள கடற்கரைகளில் தமிழ் மீனவர்கள் சென்று வாடிகளை அமைத்து மீன்பிடியில் ஈடுபட முடியுமா என்று வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு அத்துமீறல் செயற்பாடுகளில் சிங்களவர்கள் ஈடுபடுவதாகவும் மைத்திரி- ரணில் அரசாங்கம் முரண்பாடுகளை உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தமிழ் மீனவர்களின் எட்டு மீன்வாடிகள் உள்ளிட்ட மீ்ன்பிடி உபகரணங்கள் தீயிடப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட ரவிகரன், தமிழர்களைப் பலவீனமாகப் பார்க்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் நினைத்திருந்தால் இந்த ஒரு பக்க வன்முறையைத் தடுத்திருக்க முடியும் என்றும் ரவிகரன் கூறியுள்ளார்.
 
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மரநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முல்லைத்தீவுக்குச் சென்று எரிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.

தமிழர் தாயகமான முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் சென்ற திங்கட்கிழமை இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று உரையாடினர்.

தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில், சிங்கள மீனவர்களை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்க முடியாதென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, தமது வாடிகளும் மீன்பிடி உபகரணங்களும் தீயிடப்பட்டமைக்கு இலங்கைப் படையினரே காரணம் என்றும், இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் பொலிஸார் முற்பட்டதாகவும் மி்னவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை. ஆனாலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளதாக கொழும்பில் உள்ள தலைமை அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.

இறுதிப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்கள் குறிப்பாக மீனவர்கள் தமது பொருளாதாரத்தை பகுதி பகுதியாக தாமாகவே மீளக் கட்டியெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நன்கு திட்டமிடப்பட்ட முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.