கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

உறுகாமம் பிரதேசத்தில் வேறு சமூகத்தவர்களைக் குடியேற்ற அமைச்சர்கள் சிலர் முயற்சி- பிரதேச சபை உறுப்பினர் குற்றச்சாட்டு

தமிழர்களின் விகிதாசாரம் குறைவடையும் ஆபத்து
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 16 12:29
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 16 22:48
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிக்கும் சகோதர சமூகத்தைச் சேர்ந்த சிலர், இனங்களுக்குக்கிடையில் முரண்பாடுகளை தோற்று்வித்து அரசியல் லாபம் தேடுவதாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் க.சிவானந்தம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு உறுகாமத்தில், பிரதேசத்தைச் சேராதவர்களைக் குடியேற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் அமைச்சர்கள் மட்டத்தில் இடம்பெறுவதாக சிவானந்தம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். உறுகாமத்தில் இன விகிதாசாரத்தை அதிகரித்துக் காண்பிக்கும் நோக்கில் வாக்காளர் பதிவுகளும் இடம்பெறுவதாக அவர் கவலை வெளியிட்டார்.
 
பதினொரு குடும்பங்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது 130 குடும்பங்கள் இருப்பதாகத் தெரிவித்து வீட்டுத்திட்டத்திற்கும் விண்ணபித்துமுள்ளனர்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அதிகாரிகள் மட்டத்தில் பரிசிலிக்கப்பட்டு, தவறானவை என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் பலர் அமைச்சர்களாக இருப்பதனால் இலங்கை அரசாங்கத்தின் செல்வாக்குடன் சட்டத்திற்கு முரணான வகையில் உறுகாமம் பிரதேசத்தில் குடியேற்றங்களைச் செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிவானந்தம் தெரிவித்தார்.

உறுகாமத்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் கடந்த கால போரினால் இடம்பெயர்ந்து அவர்களின் சொந்த முயற்சியினால் மீள்குடியேறியுள்ளனர்.

போர் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் சென்றுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நிரந்தர வீட்டுத் திட்டங்கள், உதவிகள் எதனையும இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

ஆனால், பிரதேசத்தில் பதிவுகளே இல்லாத குடும்பங்களுக்கு அடிபடை வசதிகள் உட்பட நிரந்தர வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க கொழும்பு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிவானந்தம் குற்றம் சுமத்தினார்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் வேறு சமூகத்தவர்கள் அத்துமீறி குடியேற்றப்படுவது எதிர்காலத்தில் இன முறுகளை ஏற்படுத்தும்.

அத்துடன், வாக்காளர் பதிவுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் குறைவடையும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் சிவானந்தம் சுட்டிக்காட்டினார்.