இரண்டு கோடி ரூபாய்கள் செலவில்

நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு பாவனைக்கு ஏற்றதாக இல்லை- விவசாயிகள்

கொழும்பு அரசியல் தலையீடுகள் காரணம்?
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 17 19:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 18 10:04
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரளக்குளம் அம்மனடி அணைக்கட்டு இரண்டரைக்கோடி ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டபோதும், அது முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை என பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஈரளக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நன்மை கருதி அம்மனடி அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட்டது. ஆனால் அதன் நிர்மாணப் பணிகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசியல் நோக்கம் கருதி திறக்கப்பட்டதே தவிர விவசாயிகளின் முழுமையான பாவனைக்கு ஏற்றவாறு நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்வில்லை என விவசாயிகள் முறையிட்டுள்ளனர். அம்மனடி அணைக்கட்டிக்கு அருகாக சுமார் நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் காணப்படுகின்றன.
 
இந்த அணைக்கட்டை நிர்மாணித்தால் நீர் சேமிக்கப்பட்டு வறட்சியான காலங்களில் அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தும் நோக்கிலேயே இரண்டரைக் கோடி ருபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால், எந்தவிதமான முன்னறிவித்தல்கள் எதுவுமேயின்றி புதிய அணைக்கட்டு திறக்கப்பட்டது என்றும், எனினும் எதிர்ப்பார்க்கப்பட்டவாறு விவசாயத் தேவைக்கு ஏற்றவாறு நிர்மாணப் பணிகள் இடம்பெறவில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

புதிய அணைக்கட்டின் இரண்டு பகுதிகளும் முறையாக நிர்மாணிக்கப்பட்வில்லை. இதனால் மழைக் காலங்களில் அணைக்கட்டு நீரில் அடித்துச்செல்லப்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் கொழும்பு அரசியல்வாதிகளின் தலையீடுகள் அல்லது இனவாத செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு விவசாய அபிவிருத்திக்காக ஒதுக்கீடுசெய்யப்படும் நிதிகள், உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எஸ். வியாழேந்திரன் அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டை பார்வையிட்டார். விவசாயிகளோடும் கலந்துரையாடினார்.

ஆனால் மீள நிர்மாணிக்கப்படுமா என்பது குறித்து தற்போதைக்குக் கூற முடியாதென விவசாயிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளனர்.