என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழுவர் குறித்த தீர்ப்பு - விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு

அற்புதம்மாள், கொளத்தூர் மணி, தியாகு உள்ளிட்டோர் நம்பிக்கைத் தெரிவிப்பு
பதிப்பு: 2018 செப். 06 16:57
புதுப்பிப்பு: செப். 06 23:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என இந்திய ஒன்றிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) உத்தரவிட்டுள்ளது. 2014இல் வழங்கப்பட்டத் தீர்ப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்திய மத்திய அரசு இவ்வழக்கை அரிதிலும் அரிதான வகையில் பார்க்க வேண்டும், ஆதாலால், மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற தமிழக அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இன்று வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு தொடர்பாக எழுவர் விடுதலைக்காக கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் அற்புதம்மாள் (பேரறிவாளனின் தாயார்) அவர்களை கூர்மை செய்திகளுக்காக தொடர்புக்கொண்டு பேசியபொழுது, "எனக்கு தற்பொழுது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

கடந்த 28 ஆண்டுகளாக என் மகன் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறான். இந்திய வரலாற்றில் இவ்வளவு நீண்டகாலமாக ஏதேனும் வழக்கு நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

“தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரை சந்திக்கும் முயற்சியில் இருக்கிறேன். நிச்சயமாக தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட நிரபராதிகளான எழுவரையும் விடுதலை செய்வார் என உறுதியாக நம்புகிறேன்." என்றார்.

திராவிடர் விடுதலைக் கழத்தின் தலைவர் கொளத்தூர் மணி, “திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு முதல்வராக இருந்து பொழுது நளினியின் தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்க மனிதாபிமான அடிப்படையில் பரிந்துரைத்தார்.

அன்றைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவியால் அப்பரிந்துரை நிராகரிக்கப்பட்டபொழுதும், சென்னை உயர்நீதிமன்ற விசாரணையில் நீதிபதி சந்துரு நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வழங்கப்பட்ட பரிந்துரையை உறுதி செய்தார்.

“2014 ஆம் ஆண்டே இந்திய ஒன்றிய உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் சதாசிவம் தலைமையில் நடந்த விசாரணையில் இவர்கள் ஏழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு என தீர்ப்பு வந்தது. அதேவேளை, இத்தீர்ப்பை ஒட்டி எடுக்கப்பட்ட தமிழக அரசின் முடிவை எதிர்த்த மத்திய அரசு, தீர்ப்பு வந்தவுடன் அதனைப் பற்றி முழுமையாக பரிசீலிக்காமல் அவசர அவசரமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்பதனை சுட்டிக்காட்டினர்.

"4 ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கும் இத்தீர்ப்பு தமிழக அரசு சட்ட வல்லுநர்கள், தமிழக அரசின் ஆலோசகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் கலந்தாலோசித்து எவ்வித தடங்கலுக்கும் வழிவகுக்காமல் நிதானமாகவும் தீர்க்கமாகவும் எழுவர் விடுதலை குறித்த சட்டப்பூர்வமான, அதிகாரப்பூர்மான அறிவிப்பை வெளியிட வேண்டும்” என கூர்மைக்கு தெரிவித்தார்.

சமூக நீதி தமிழ்த்தேச இதழின் ஆசிரியர் தியாகு அவர்கள், “இது எழுவர் விடுதலைக்கான தீர்ப்பு மட்டுமல்ல, இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமையினை நிலைநாட்டியுள்ளது. 161 ஆம் சட்டப் பிரிவினை பயன்படுத்தி மாநில அரசு எழுவர் விடுதலை குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் என நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அது இன்று உச்சநீதிமன்றத்தின் வாயிலாக சட்டப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாது, சிறையில் அடைந்து கிடக்கும் பலரது விடுதலைக்கான வழியை இத்தீர்ப்பு திறந்துவிட்டுள்ளது” என தெரிவித்தார்.

தன்னாட்சித் தமிழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன், “நீண்டகாலமாகவே சட்ட வல்லுநர்கள் மாநில அரசிற்கு உரிமை உள்ளது என்றே வாதாடிவந்தனர். ஆனால், பிஜேபி, காங்கிரஸ் என யார் ஆட்சி செய்தாலும், இவ்வழக்கினை அரிதிலும் அரிதானவையாக கருதி, தமிழக அரசிற்கு எவ்வகையான அதிகாரமும் இல்லை எனவே வாதிட்டு வந்துள்ளனர்.

இன்றைத் தீர்ப்பு சட்டவகையிலான அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் முதல்வர் உள்ளிட்ட தமிழக ஆட்சியாளர்களை சந்தித்து இவ்வழக்கின் தீர்ப்பை உறுதிப்படுத்த முயலவேண்டும். செங்கொடியின் தியாகத்தை நாம் மறந்துவிடக்கூடாது” என தெரிவித்தார்.

ஏழுத் தமிழர் விடுதலைக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் பெரியார் கூறுகையில்,"அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அரசாங்கம் எடுத்த முடிவின்படி நின்று தனது அமைச்சரவையை கூட்டி ஏழு தமிழர்களை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் விடுதலை செய்வார் என உறுதியாக நம்புவோம்."என தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கு மீள் பார்வை

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர் சிறையில் இருந்த 26 பேரில் பேரறிவாளன், சாந்தன் முருகன், நளினி ஆகியோருக்கு மரணதண்டனையும் பயாஸ், ரவிச்சந்திரன் , ஜெயகுமார் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. ஆயுள் சிறை தண்டனையும் விதித்து இதர 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி இருந்த நிலையில் சுமார் 11 ஆண்டுகள் கால தாமதத்துக்குப் பிறகு நிலுவையில் இருந்த அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் காஞ்சி மக்கள் மன்ற செயற்பாட்டாளர் செங்கொடி என்ற இளம்பெண் தன் உயிரை கொடையாக கொடுத்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வும் போராட்ட உணர்வையும் தூண்டினார்.

இதனைத் தொடர்ந்தே, ஆகஸ்து 2011 இல், அன்றைய தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா மூவர் தூக்கினை ரத்து செய்யும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார்.

ஏழு பேரையும் விடுவிக்க உள்ளோம் : ஜெ.ஜெயலலிதா

2014ஆம் ஆண்டில் வெளியான உச்சநீதிமன்றத் தீர்ப்பினைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக அன்றைய முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து, ஒன்றிய அரசின் கருத்தைக் கோரியிருந்தது.

ஆனால், நடுவண் புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுதான் முடிவெடுக்க முடியுமென ஒன்றிய அரசு தெரிவித்தது.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் 2015, 2 டிசம்பர் அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களை விடுவிக்க ஒன்றிய அரசின் ஒப்புதல் தேவை என ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு திர்ப்பளித்தது.

விடுதலை செய்யும் அதிகாரம் : ஒன்றிய அரசுக்கா ? தமிழ்நாடு அரசுக்கா ?

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளதா அல்லது மத்திய அரசுக்கு உள்ளதா அல்லது இருவரும் கலந்து முடிவெடுக்க வேண்டுமா என்பது தொடர்பிலான வாதங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு எடுத்த எழுவர் விடுதலை செய்யும் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு முன்பு நிலுவையில் இருந்தது.

ஒன்றிய அரசுக்கு கெடு :

இதனிடையே தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு சில மாதங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எழுவரை விடுவிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தின் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கெடு விதிக்கப்பட்டது.

161 தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, "அரசியல் சட்டம் 161 பிரிவை பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது" என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

எடப்பாடி அரசுக்கு உண்டு அதிகாரம் : முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் வழியில் சட்ட விதி 161 யை பயன்படுத்தி தற்பொழுதைய அரசு கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் எழுவரை விடுதலை செய்யும் என்பதே தமிழர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.