வடமாகாணம்

வவுனியா கனகராயன் குளத்தில் முன்னாள் போராளியும் அவரது மனைவி மகள் மீதும் இலங்கைப் பொலிஸார் தாக்குதல்

சிவசக்தி ஆனந்தன் கண்டனம், இலங்கை அமைச்சரிடம் முறைப்பாடு
பதிப்பு: 2018 செப். 10 16:25
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 11 14:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி மீதும் அவரது மனைவி, 14 வயது மகள், கைக்குழந்தை மீதும் கனகராயன் குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையாகத் தாக்கியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளியான பே.வசந்தக்குமார் அவரது மனைவி அவரது 14 வயது மகள் ஆகியோர் கிளிநொச்சி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மகளுக்கு வயிற்றில் கடுமையான காயங்கள் உள்ளதால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
 
கனகராயன்குளத்தில் உள்ள முன்னாள் போராளியின் காணி ஒன்றை பிரபல வர்த்தகர் ஒருவருக்கு கொழும்பு அரசியல் செல்வாக்குடன் ஹேட்டேல் அமைப்பதற்கு கனகராயன் குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.

ஆனால் அது தன்னுடைய காணி எனக்கூறி கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டதால், முன்னாள் போராளியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

கனகராயன்குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென சிவில் உடையில் முன்னாள் போராளியின் வீட்டுக்குச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.

அவரது மனைவி கூச்சலிட்டபோது அவரையும் மகளையும் தாக்கியுள்ளார். கடுமையான காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அயலவர்கள் அனுமதித்தனர்.

பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளியின் காணியை தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவருக்கு ஹோட்டேல் அமைப்பதற்காக வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே முன்னாள் போராளியும் அவரது மனைவி மகளும் தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் வெளியிட்டுள்ள சிவசக்ததி ஆனந்தன், இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இலங்கைப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோரிடம் முறையிட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளார்.

அதேவேளை, தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் போராளியின் உறவினர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடக்கு- கிழக்கு தாயகப் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை, தனியார் நிறுவனங்களுக்கு பெருமளவு பணத்தைப் பெற்றுக் கொண்டு வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை முப்படையினரும் இலங்கைப் பொலிஸாரும் கொழும்பு அரசியல் செல்வாக்குடன் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.