வடமாகாணம்

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களின் அவல நிலை- தாக்குதல் நடத்தியவர்கள் பிணையில் விடுதலை

வைத்தியர் ஒருவரும் மகப்பேற்று வைத்திய நிபுணரும் வெளியேறினர்.
பதிப்பு: 2018 செப். 11 15:10
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 11 15:46
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தைக் கண்டித்து வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். எனினும் குறித்த இரு சந்தேக நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதனால் மன்னார் பொது வைத்தியசாலையில் தமக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்களில் மாத்திரம் மகப்பேற்றிற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு வருகை தந்த 22 கர்ப்பிணித் தாய்மார்கள் அம்புலான்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் மேலதிகமாக உள்ள கர்ப்பிணித்தாய்மார்கள் யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.

மன்னார் பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் கடந்த வியாழக்கிழமை இரவு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமையே குறித்த பிரச்சினைகளுக்கு காரணம் என வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளது.

நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.