வடமாகாணம் மன்னார்

தாழ்வுபாடு கிராமத்தின் கடற்கரையோர வீதியை வழி மறித்து இலங்கைக் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர்

உடனடியாக அகற்றுமாறு மீனவக் குடும்பங்கள் கோரிக்கை
பதிப்பு: 2018 செப். 12 22:00
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 13 11:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு மீனவ கிராமத்தின் கடற்கரையோரமாகவுள்ள வீதியை மறித்து இலங்கை கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனால் முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மன்னார் தாழ்வுபாடு மீனவ கிராமத்திலிருந்து ஓலைத்தொடுவாய், பேசாலை, நடுக்குடா ஆகிய பகுதிகளின் கடற்கரையை அண்டி, முப்பது வருடங்களாக பாதை ஒன்றும் உபயோகத்தில் உள்ளது. மேலும் தாழ்வுபாட்டில் இருந்து ஓலைத்தொடுவாய் வரை நன்கு செப்பனிடப்பட்டு பெருமளவு பொதுமக்களும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் தினமும் பயன்படுத்தும் இவ்வீதி ஓலைத்தொடுவாயிலிருந்து தலைமன்னார் கடற்கரை வரை மணல் வீதியாக உள்ளது. அத்துடன் குறித்த பாதை தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் வரை நீண்டும் செல்கின்றது
 
அத்துடன், மன்னார் நகரிலிருந்து தலைமன்னார் பியர் சுமார் 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நிலையில் தாழ்வுபாடு கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கும் இவ்வீதியில் சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து தலைமன்னார் பியரை விரைவில் சென்றடைய முடியும்.

இந்நிலையிலேயே குறித்த வீதி ஓலைத்தொடுவாய் கிராமத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டு வீதியின் 800 மீற்றர் தூரத்திற்கு அருகருகாமையில் அமைந்துள்ள தனியார் காணிகளும் அபகரிக்கப்பட்டு, சுமார் நான்கு ஏக்கர் விஸ்தீரணத்தில் இலங்கைக் கடற்படை முகாம் அமைத்துள்ளது.

இந்தக் கடற்படை முகாம் வளாகத்தில் நிரந்தர கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதியை பொதுமக்களும் மீனவர்களும் பயன்படுத்துவதற்கு இலங்கைக் கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு கிராமமானது முற்றுமுழுதாக கத்தோலிக்கத் தமிழ் மீனவர்கள் செறிந்து வாழும் கிராமமாகும். இக்கிராமத்தில் சுமார் 750 குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்த நிலையில் குறித்த வீதியை இலங்கைக் கடற்படையினர் வழி மறித்தமையானது அந்தக் குடும்பங்களின் வாழ்வாதரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்வுபாட்டிலிருந்து ஓலைத்தொடுவாய் வரையான குறித்த வீதியின் கடற்கரையை அண்டிய பகுதியில் தாழ்வுபாடு மீனவர்களின் சுமார் நுாறு வருட கால வரலாற்றுப் பாரம்பரிய ஒன்பது கரவலைப்பாடுகள் அமைந்துள்ளன. படகுத் தரிப்பிடங்களும் அமைந்துள்ளன.

தாழ்வுபாடு, தோட்டவெளி, எருக்கலம்பிட்டி, ஐந்து தென்னம்பிள்ளையடி, ஓலைத்தொடுவாய், நடுக்குடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் மீன்பிடி இறங்குதுறையும் அவர்களின் கரவலைப்பாடும் இந்த வீதியின் அருகாமையில் அமைந்துள்ளன.

ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கைக் கடற்படையினரால் சிறிய காவலரணொன்றும் அமைக்கப்பட்டது. குறித்த காவலரணே தற்போது பாரிய முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பாரிய கடற்படைத் தளமாக மாறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

இந்த நிலையில், தாழ்வுபாடு தமிழ் மீனவர்கள் குறித்த பாதையை தாம் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறும் இதற்கு இடையூறாக உள்ள ஓலைத்தொடுவாய் உள்ள இலங்கைக் கடற்படை தளத்தை அகற்றுமாறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்க அதிபர் மோகன்ராஜ், மன்னார் பிரதேச செயளாளர் எம்.பரமதாஸ் ஆகியோர் தாழ்வுபாடு மீனவர்களுடன் சென்று வழி மறிக்கப்பட்டுள்ள வீதியை பார்வையிட்டனர்

இந்த விடயம் குறித்து இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடனும் உரையாடியுள்ளனர். இது தொடர்பான உயர்மட்ட கூட்டம் ஒன்று எதிர்வரும் 25 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.