இலங்கை முப்படைகளின் பிரதானி

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மீதான விசாரணையைத் தடுக்க மைத்திரி முயற்சி- அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதம்

போர்க்காலக் குற்றங்களை தேசியபாதுகாப்புக்குள் கொண்டு வருவரும் சாத்தியம்
பதிப்பு: 2018 செப். 13 22:47
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 19:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குச் செல்வதை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன. மாணவர்கள் உட்பட 11 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் வெள்ளைவானில் கடத்தப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் கடற்படை அதிகாரியான நேவி சம்பத் பிரதான எதிரியாவார். அவர் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு ஐந்து இலட்சம் ரூபாய்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ணவை இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென்ற பத்தாம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு அழைத்திருந்தது.
 
ஆனால் அவர் மெக்சிக்கோ நாட்டின் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண வெளிநாடு சென்றமை தமக்கும் தெரியாதென இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவும் கூறியிருந்தது.

இலங்கை நீதிமன்றங்கள் , இலங்கை குற்றப் புலனாய்வுப் பிாிவு ஆகியவற்றில் இடம்பெறும் இலங்கைப் படையினர் மீதான போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கூட தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு என்ற கவசம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளமை இலங்கைத் தீவின் எதிர்காலப் பாதுகாப்புக்கு ஆபத்து-- அவதானிகள்.

இந்த நிலையில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண விசாரணைக்குச் செல்வதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கூறியுள்ளார்.

ஆனால், ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் அமைச்சரவைக் கூட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக அமைச்சரவையின் உயர்மட்டத் தகவல் ஒன்று கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கிடைத்துள்ளது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு ஒன்றுக்குச் சென்றுள்ளதால், அவர் கொழும்பு திரும்பியதும் மீண்டும் ஒரு விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும் என மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மைத்திரிபால சிறிசேன தனது சொந்த அரசியல் நலனுக்காக அந்த விசாரணையைத் தடுப்பதை ஏற்க முடியாதென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் கூறியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண மீதான குற்றச்சாட்டை போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயமாகக் கருதி விசாரணை நடத்துவதைத் தடுக்க பொதுக் கொள்கை ஒன்றின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் விரும்புவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை முன்வைத்த போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முப்படையின் உயர் அதிகாரிகளையும் சிப்பாய்களையும் விசாரணைக்கு உட்படுத்துவதை அனுமதிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன கடந்த சனிக்கிழமை இரத்னபுர நிவத்திகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தர்.

எவ்வாறாயினும் வடக்கு-கிழக்கு பகுதிகளில் போர்க்காலத்தில் இடம்பெற்ற கடத்தல். கொலை ஆகிய போர்க் குற்றங்கள் தொடர்பாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண உள்ளிட்ட இலங்கை முப்படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவச் சிப்பாய்களை இலங்கை நீதிமன்றங்களில் கூட விசாரணை செய்யப்படுவதை தடுப்பதற்கு, கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய பாதுகாப்பு என்ற விடயத்திற்குள் உள்ளடக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜே.வி.பியும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் இதன் அடிப்படையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனை, கட்சி அரசியல்சார்ந்தது என்ற அடிப்படையில் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ள அங்கவீனமான இராணுவச் சிப்பாய்களின் விளையாட்டு விழாவுக்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தலைமை தாங்கவுள்ளார். எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக ஜூன் மாதம் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை நீதிமன்றங்கள் , இலங்கை குற்றப் புலனாய்வுப் பிாிவு ஆகியவற்றில் இடம்பெறும் இலங்கைப் படையினர் மீதான போர்க்காலக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கூட தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு என்ற கவசம் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளமை இலங்கைத் தீவின் எதிர்காலப் பாதுகாப்புக்கு ஆபத்து என அவதானிகள் கூறுகின்றனர்.