வடமாகாணம்

வவுனியா அருவியாறு நீர்த்தேகக் கதவுகளைத் திறந்து நீரைப் பயன்படுத்தும் இலங்கை இராணுவம்- விசாயிகள் பாதிப்பு

செற்செய்கைகள் கைவிடப்பட்டுள்ளதாக சத்தியலிங்கத்திடம் முறைப்பாடு
பதிப்பு: 2018 செப். 14 18:36
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 19:17
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசுக் கதவுகளை இலங்கை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து பயன்படுத்துவதால் விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். அருவியாறு பாவற்குளத்திலிருந்து செட்டிகுளம் ஊடாக பாய்ந்து செல்கின்றது. இவ்வாறு பாய்ந்து செல்லும் அருவிக்கு அருகில் உள்ள கிறிஸ்தவகுளத்தில் அருவித்தோட்டம் என்ற பகுதியில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருவித்தோட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் நீண்டகாலமாக ஈடுபட்ட விவசாயிகள், இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் எதுவுமே செய்ய முடியாதநிலையில், விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
 
மாற்று வழிகள் இன்றித் தவிப்பதாக பாதிக்கப்படட விவசாயிகள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்திடம் முறையிட்டுள்ளனர்.

25 ஏக்கர் நிலத்தில் பிரதேச விவசாயிகள் சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் மாணிக்கம் பண்ணையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இலங்கை இராணுவத்தினர் தமக்குத் தேவையான நீரைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் 25 ஏக்கர் நிலத்தில் சிறுபோகச் செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகியுள்ளனர். சிறுபோகச் செய்கையை கைவிட்டுமுள்ளனர்.

விவசாயச் செய்கைகளுக்குரிய இலங்கைத் திணைக்கள அதிகாரிகளின் அனுமதிகள் இன்றியே இலங்கை இராணுவம் தன்னிச்சையாக நீரைப் பயன்படுத்துவதாக பிரதேச விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை பிரதேச விவசாயிகள் விவசாயச் செய்கைகளை கைவிட்டமையினால், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக அருவியாறுப் பகுதி காட்சியளிப்பதாக சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அருவியாறு பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளதாகவும், குறிப்பாக இலங்கை இராணுவம் பொதுமக்களின் விவசாய நிலங்கள் மற்றும் நீரேந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை இராணுவத் தலைமையகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறிய சத்தியலிங்கம். பாதிக்கப்பட்ட பிரதேச விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுபெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள இலங்கைக் கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணம் வலி.மேற்குப் பிரதேச சபையால் செலுத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ந.பொன்ராசா ஆதாரத்துடன் குற்றம் சுமத்தியிருந்தார்.

செட்டிகுளம் பிரதேச சபைக்கு வருமானம் தரக்கூடிய வகையில் கல்லாறுப் பாலத்திற்கு அன்மித்த தேக்கம், நீர்த்தேக்கப் பகுதியை புனரமைக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஜேசுதாஸ் டெல்சன் பிரேரணையை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.