மட்டக்களப்பு வாழைச்சேனை

கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க சிறிய தோணியில் ஆபத்தான பயணம்- மக்கள்

பாலம் அமைக்குமாறு கோரிக்கை
பதிப்பு: 2018 செப். 17 19:53
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 18 21:22
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க ஆபத்துமிக்க சிறிய தோணியி்ல் பயணம் செய்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் பாலம் ஒன்றை அமைத்துத் தருவாதாகக் கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கிண்ணையடி கிராமத்தைச் சேர்ந்த சே.நாகேந்திரன் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரைப்பணயம் வைத்து சிறிய தோணியில் நீ்ண்டகாலமாக பயணம் செய்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாராவெளி, முறுக்கதீவு, பிரம்படித்தீவு, போன்ற கிராமங்களில் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் உண்டு. அங்கு செய்கை பண்ண, ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பாதையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
 
மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது இப்பாதையை பயன்படுத்துவது மிகவும் கடினம். உயிரைப் பணயம் வைத்துத் தான் மக்கள் போக்குவரத்துச் செய்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் தற்போது மீளக் குடியேறிய மக்கள் தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை செய்வதற்கு உயிராபத்துமிக்க இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் இந்தக் கிராமங்களுக்கு வரும் அரசியல்வாதிகளிடம் கிராமத்தின் அத்தியாவசியமான போக்குவரத்து தொடர்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், கிண்ணையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபை, மக்களின் தேவை கருதி ஆலயத்தின் சார்பாக சிறிய வகை தோணிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருகின்றது.

ஆனாலும் இதுவும் பாதுகாப்பான போக்குவரத்து என்று கூறமுடியாது. மக்களின் இந்தக் கஷ்டங்களை தீர்க்க அரசியல்வாதிகள் தலையிட்டு இப்பகுதியிலிருந்து செல்வதற்காக நிரந்தர பாலம் ஒன்றை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.