அணு உலையின் கோர முகத்தை சொல்லும் திரைப்படம்!

சென்னையில் திரையிடப்பட்டது தென்கொரிய மொழிப் படம் பண்டோரா !

தமிழ்நாட்டுக்கு சொல்லும் கதை என்ன?
பதிப்பு: 2018 செப். 17 22:54
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: செப். 18 10:02
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அணு உலையின் கொடிய முகத்தைப் பற்றியும் அதன் அரசியலையும் எடுத்துச்சொன்ன தென்கொரிய திரைப்படம் 'பண்டோரா - Pandora' , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா அவர்களின் திரையரங்கில் சிறப்புக்காட்சியாக 15.09.2018 அன்று திரையிடப்பட்டு பொதுவெளி விவாத நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. “தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு உரிமைசார் போராட்டங்களுக்கான அறவழி பெருந்திரள் மக்கள் வடிவத்தை உருவாக்கியதில் கூடங்குளப் போராட்டத்திற்கென தனி பங்குண்டு” எனவும் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் அப்போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அணுசக்திக்கெதிரான மாணவ அமைப்பினர் தெரிவித்தனர்.
 
திரைப்படம் திரையிடுவதற்கு முன்னதாக, கூடங்குளப் போராட்டக் களத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்வும் நடத்தப்பட்டது, சூழலியல் செயற்பாட்டாளர்கள் சு.ப.உதயக்குமார், பொறியியலாளர் சுந்தராஜன், நித்தி ஜெயராமன், எஸ்.டி.பி.ஐ கட்சி உமர், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வ.கெளதமன், நயனார் கோபி, தோழர் தமிழ்நேயன், வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், மாணவி வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திரைப்படம் பேசும் அரசியலை விவாதித்தனர்.

இத்திரைப்படம், 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமானது "நாம் சொல்லவில்லை அணுவுலையில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சுகள் சொல்கிறது அணுவுலை எவ்வளவு பேராபத்து என்பது..." என்ற அணு உலை அரசியலை ஆபத்தை விளக்கும் விளம்பரத்தோடு வந்தது நினைவிருக்கலாம். ஆசிய மற்றும் கிராண்ட் பெல் விருதுக்களுக்கு 12பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இத்திரைடப்பத்தை சென்னையில் திரையிட்டத்து தொடர்பாக கூர்மையின் செய்தியாளரிடம் பேசிய நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான கட்டட எழில் வடிவமைப்பாளர் ரத்னவேலன். “இந்த திரைப்படத்தை வெளியிட உரிய அனுமதியை பெற ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக கடினப்பட்டு இயக்குநர் பார்க் ஜாங் வூ அவர்களிடம் தொடர்புகளை எடுத்து, தமிழ்நாட்டின் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து பல மாதங்கள் அறவழியில் நடந்தேறிய போராட்டத்தைப் பற்றியும் அப்போராட்டக் காலங்களில் உயிரிழந்த தியாகிகளின் தியாகத்தை பற்றியும் எடுத்துக்கூறி திரைப்படத்தை திரையிட அனுமதி கேட்டோம்.

“நெட்ஃப்ளிக்ஸ் எனும் நிறுவனத்திற்கு அந்த உரிமம் அளிக்கப்பட்டுள்ளதை கூறிய இயக்குநர் பார்க் ஜாங் வூ நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தான் பேசுவதாக கூறியதையடுத்து நாங்கள் நிகழ்வின் வேலைகளை தொடங்கினோம். இயக்குநர் பார்க் ஜாங் வூ அவர்கள் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து நாங்களும் அந்நிறுவனத்திடம் அனுமதிக்கடிதம் ஒன்றை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி அதன்பின் ஏன் வெளியிட விரும்புகிறோம் ? நிகழ்வினை எதற்காக எடுக்கிறோம் ? என்பன போன்றவற்றை எடுத்துச்சொல்லி அனுமதி வாங்கினோம்” என எடுத்துக்கூறினார்.

மேலும், நிகழ்வின் நோக்கம் குறித்து, அணு உலைக்கு எதிரான மாணவர் இயகத்தின் ஒருங்கிணைப்பாளர் இளவரசன் அப்பு, “கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என்பது வெறுமென திருநெல்வேலி மக்களுக்காகவோ தமிழ்நாட்டு மக்களுக்காகவோ நடத்தப்பட்ட போராட்டமல்ல! அது இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வள அழிப்பிற்கு எதிரான போராட்டங்களின் ஒரு வடிவம். இன்னும் சொல்லப்போனால், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் அணு உலை என்பது அழிவு உலை என்பதை எடுத்துச் சொல்லிய அறவழியிலான போராட்டம் கூடங்குளப் போராட்டம்.

“ஜப்பானில் புகுஷிமாவில் நடந்ததை போல இனி இந்த பூமியில் வேறெங்கும் நடக்க கூடாது என்ற இந்த அன்னை பூமியை காக்க எழுந்த கலகக்குரல். ஒரு விடயத்தை மக்கள் மத்தியில் மிக எளிதாக கொண்டு செல்ல கலை என்பது மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது அதனால் தான் மார்க்சிய அறிஞர் மார்க்சிம் கார்கி 'கலகம் செய்ய எழுந்துவிட்ட ஒருவனுக்கு உதவுவதே கலையின் பணி' என்றார்.

“அணு ஆயுதம் தயாரிக்கவே பெரிதளவில் பயன்படும் இத்தகைய உலைக்கல ஆபத்திற்கு எதிராக கலகம் செய்ய வந்த அறமாந்தர்களுக்கு வலு சேர்க்கும் இந்த திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திட்டமிட்டு இத்திரைப்படத்தை காட்சிப்படுத்தினோம். தமிழ்நாடு முழுவதும் இதனை கொண்டு செல்ல பிற தோழமை அமைப்புகளோடும் பேசி வருகிறோம்” எனக் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமரன் கூறுகையில்," அணு உலை வெடிப்பு குறித்த இரண்டரை மணி நேரம் ஓடிய பண்டோரா என்ற தென்கொரியன் திரைப்படத்தை, துவக்கம் முதல் முடிவு வரை பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளும் நம்மை பிரமிக்க வைத்தது. அதிலும் மக்கள் அணு உலை வெடித்தால் என்ன நிலைமைக்கு போவார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது. “அணு உலையில் வேலை செய்யும் தொழிலாளிகள் படும் அவலம் , அவர்களின் உயிர்க்கு உத்தரவாதம் இல்லாத சூழல் , உயிரைக் காக்க ஓடும் சூழல் , குடும்பத்தின் கதறல் , மக்களின் ஓட்டம் , பிரதமரின் பித்தலாட்ட வேலைகள் , பிரஸிடன்ட்க்கு தெரியாமல் நடக்கும் வேலைகள் , அதை தெரிந்து கொண்ட பின் ஊழியர்களிடம் கெஞ்சும் பரிதாபம் , இதை தாண்டி கசிவை அடைக்க போராடும் ஊழியர்கள் , நகரத்தை விட்டு மக்கள் ஓடும் கதறல் , கதிர்வீச்சு பரவாமல் இருக்க கொதிகலனை குளிர்விக்க கடல்நீரை பயன்படுத்தும் பதற்றம், கடைசியில் அந்த படத்தின் ஹீரோ தன் உயிரை கொடுத்து அதை அடைக்க படும் பாடு , அப்போது குடும்பத்திடம் பேசும் பாச பிணைப்பு, அதை நாட்டு மக்கள் உட்பட தலைமை செயலக அதிகாரிகள், பிரதமர், பிரசிடெண்ட உட்பட பலர் கண்ணீர் விட்டு பார்க்கும் காட்சி, கடைசியில் தன் உயிரை கொடுத்து மக்களை காக்கும் ஊழியர் என கதையோடு படம் முடிகிறது.

“அணு உலை வெடித்தால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அரசுகள் என்ன செய்யுமோ ? மக்களிடம் உண்மையை சொல்ல முடியாமல் மறைக்க என்னென்ன பித்தலாட்ட வேலைகள் என படம் சூப்பர். அனைவரும் பார்க்க வேண்டிய படம் பண்டோரா. குறிப்பாக, தமிழக முதல்வர், இந்திய ஒன்றியப் பிரதமர், இந்திய ஒன்றிய ஜனாதிபதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்." என கூறினார்.