கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாழைச்சேனையைச் சேர்ந்த இளம் பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்- கணவன் முறைப்பாடு

முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இலங்கைப் பொலிஸார்
பதிப்பு: 2018 ஒக். 04 22:09
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 09:47
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்து தாயகம் திரும்பிய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் முறையிட்டுள்ளார். மட்டக்ககளப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 71 பி, கருணைபுரம் வாழைச்சேனை என்ற முகவரியில் வசிக்கும் 28 வயதான கோபாலகிருஷ்ணப்பிள்ளை நந்தினி, கடந்த 2015.09.12 அன்று கட்டார் நாட்டுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்றிருந்தார். மூன்று வருடங்கள் கடந்த நிலையில் 13.09.2018 அன்று தாயகம் திரும்பியபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் சிவநாதன் சிவரூபன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதி மட்டக்களப்புக்குவரவுள்ள தகவலை இரு தினங்களுக்கு முன்னர் நந்தினி, தனது கணவனுக்கு அறிவித்துள்ளார். அதனையடுத்து 13ம் திகதி கணவன் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார்.

விமான நிலைய வரவேற்பு மண்டபத்தில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்தபோதும் மனைவி வரவில்லை. பின்னர் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தியபோது அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நந்தினி
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 71 பி, கருணைபுரம் வாழைச்சேனை என்ற முகவரியில் வசிக்கும் 28 வயதான நந்தா என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணப்பிள்ளை நந்தினி என்பவரின் இரண்டு பிள்ளைகளையும் படத்தில் காணலாம்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தியபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் மட்டக்களப்பு வாழைச்சேனைக்குத் திரும்பியதாக நந்தினியின் கணவர் சிவரூபன் தெரிவித்தார்.

பின்னர் மனைவி பணி புரிந்த கட்டார் நாட்டில் வசிக்கும் தனது சகோதரிக்கு அறிவித்தாகவும் நந்தினி தாயகம் திரும்பவில்லை என்பதை அப்போதுதான் தனது சகோதரியும் அறிந்து கொண்டார் என்றும் சிவரூபன் கூறினார்.

அதேவேளை, மனைவி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது, அங்கிருந்த இலங்கைப் பொலிஸ் அதிகாரி விமானநிலைய பொலிஸ் பிரிவில் முறையிடுமாறு கூறியதாகவும் சிவரூபன் கவலையுடன் கூறினார்.

பின்னர் கட்டுநாயக்கா விமானநிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்றபோது, வாழைச்சேனை பொலிஸாரிடம் முறை்ப்பாட்டை பதிவு செய்யுமாறு கூறியதாகவும் சிவரூபன் கண்ணீர்மல்கக் கூறினார்.

இவ்வாறு கொழும்பு கட்டுநாயக்கா, வாழைச்சேனை என்று ஒரு வாரகாலம் அலைந்து திரிந்த பின்னர் சென்ற 20ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸாரிடம் முறைப்பாட்டைப் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பில் உள்ள கிளை அலுவலகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்குமான நிறுவனம் ஆகியவற்றில் முறையிட்டுள்ளதாகவும் சிவரூபன் கூறினார்.

மனைவி காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து நான்கு தடவைகள் இலங்கைப் பொலிஸாரிடம் முறையிடச் சென்று ஏமாற்றம் அடைந்ததாகவும் இது தனது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் சிவரூபன் குற்றம் சுமத்தியு்ள்ளார்.

அதேவேளை, நந்தா என அழைக்கப்படும் கோபாலகிருஷ்ணப்பிள்ளை நந்தினி என்ற 28 வயது பெண் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இதுவரையும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.