யாழ்ப்பாணம் அரியாலை

மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? பிரதேச மக்களுக்குச் சந்தேகம்

வன்முறைகள் முரண்பாடுகளை உருவாக்கும் சம்பவங்களைத் தவிர்க்குமாறு வலியுறுத்தல்
பதிப்பு: 2018 ஒக். 08 00:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 10:18
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம்- அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றவர்கள் மீது அடையாளந்தெரியாதவர்களால் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.30 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மண் கடத்தல் வரையறையின்றி சென்று கொண்டிருக்கும் நிலையில், அதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும் இதுகுறித்து இலங்கைப் பொலிஸார் எவ்வித சட்டநடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையில் சட்டவிரோத மண் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சிவில் உடையில் வந்த இருவர், உழவு இயந்திரங்களை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதும், உழவியந்திரங்கள் வேகமாக தப்பிச் செல்ல முனைந்தது.
 
ஆனால், சிவில் உடையில் நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின்னர் உழவு இயந்திரத்தை நோக்கியும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

எனினும், மணல் கடத்தல்காரர்கள் எவ்வித ஆபத்துமின்றி தப்பித்து சென்றுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்துவது நியாயமான செயற்பாடு அல்ல. இது மக்கள் மத்தியில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

அதுவும் சிவில் உடையில் நின்று துப்பாக்கிப் பிரயோகம் செய்தால் அது வேறு வகையான வன்முறைகளுக்கும் வழிவகுக்கும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இலங்கைப் பொலிஸார் உரியமுறையில் செயற்பட வேண்டும் என்றும் சிவில்சேவை அதிகாரிகள் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இனஅழிப்பு போர் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தும் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கொழும்பு உள்ளிட்ட வேறு வெளி மாவட்டங்களுக்கும் இலங்கைப் பொலிஸாரின் உதவியுடன் மண் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்குப் பின்னால் கொழும்பை மையப்படுத்திய அரசியல் செல்வாக்கும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் உள்ள வளங்கள் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றன. ஊரில் இளைஞர்களுக்குப் போதைப் பொருட்களை இலங்கைப் படையினர் விற்பனை செய்து, மக்கள் மத்தியிலும் பிரதேசங்களிடையேயும் முரண்பாடுகளையும் வன்முறைகளையும் தோற்றுவிப்பதாகவும் ஏலவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சட்டவிரோத மண் அகழ்வுக்கு இலங்கைப் பொலிஸாரே காரணம் என்று வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பொன்னாலைப் பிரதேசம் தொடக்கம் சம்பில்துறை வரையான பிரதேசங்களில் மணல் அகழ்வதால், எதிர்காலத்தில் நிலத்தடி நீருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டி வலி.மேற்கு பிரதேசசபையில் பிரேரணை ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் பலவற்றிலும், வடக்கு மாகாணத்துக்குரிய ஜனாதிபதி செயணிக் குழுக் கூட்டத்திலும் பல தடவை சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென மக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். அதேவேளை, வடமாகாணத்தில் இயங்கும் சில பிரபல வர்த்தகர்களும் கொழும்பை மையப்படுத்திய அரசியல் செல்வாக்குடன் மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.