இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி நடைபவனி

ஆதரவு வழங்குமாறு மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்- கொழும்பில் நாளை போராட்டம்
பதிப்பு: 2018 ஒக். 08 16:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 22:53
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வழக்கு விசாரணைகளின்றி இலங்கைச் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்கள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாபெரும் கண்டப்போராட்டத்துடன் கூடிய நடைபவனியில் குதித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று முற்பகல் 11.30 அளவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய் என்பன போன்ற வாசகங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மாணவ மாணவிகள் உட்பட கல்வி சார் ஊழியர்களும் இதன்போது தமது கண்டணத்தை வெளிப்படுத்தினர்.

இன்றைய போராட்டத்தை தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி மாபெரும் நடைபவனியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கி.கிருஸ்ணமேனன் இதற்கு சமூகத்தின் சகல மட்டங்களிலிருந்தும் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தினார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவனி, கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை இடம்பெறவுள்ளதாகவும், தமிழ் மக்கள் அனைவரும் அதற்கான ஆதரவை நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இனியும் அரசு காலம் தாழ்த்த முடியாது. ஜனாதிபதி இது தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு ஒன்றை முன்வைக்கவேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும். இதில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து உறுதியான முடிவெடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

வடக்கு- கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், அடையாள உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் நடைபவனியை ஆரம்பித்துள்ளனர்

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப்போவதாகவும் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்தப் போராட்டத்தை எந்த வழியில் முன்னெடுப்பது என்பது தொடர்பிலும் நாளை நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறினார்.