கிழக்கு மாகாணம் - அம்பாறை

காஞ்சிரன்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

எவ்வித நீதியும் நிலைநாட்டப்படவில்லை என மக்கள் விசனம்
பதிப்பு: 2018 ஒக். 10 10:59
புதுப்பிப்பு: ஒக். 10 21:36
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படையினரை அதீத பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16 ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல், அம்பாறை- திருக்கோவில் பகுதியில் அனுட்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நினைவேந்தல் இடம்பெற்றது.
 
மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரிநாயகம் சந்திரநேருவின் உருவப்படத்திற்கு அவரது மனைவி மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றினார்.

இதனையடுத்து படுகொலை செய்யப்பட்டோரது பெற்றோர் தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதுடன், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு ஒக்டோர் மாதம் 09 ஆம் திகதி மாலை காஞ்சிரன்குடா இராணுவ முகாமினை நோக்கி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

தமிழர் தாயகம் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித நீதியும் நிலைநாட்டப்படாமையைப் போன்று, இப் படுகொலை தொடர்பிலும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்டோரின் உறவுகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.