ஈழத்தில் வளங்கொழிக்கும் விவசாய பூமியான

கிளிநொச்சி- பூநகரியில் ஆறாயிரம் ஏக்கர் உவர் நிலமாக மாறியுள்ளது என்கிறார் அரச அதிபர்- பிரதேச மக்கள் கவலை

குடிநீருக்கும் தட்டுப்பாடு- நன்னீர்க் கிணறுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
பதிப்பு: 2018 ஒக். 10 22:10
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 12 14:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இன அழிப்புப் போரின் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் உட்பட காணிகள் சூறையாடப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் என்பது அரியதொரு வளமாக மாறிவருவதனால் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதிகளவான பயிர்ச்செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
பூநகரிப் பிரதேசம் முன்னர் நீர் வளம் மற்றும் நில வளம் கொண்ட அழகிய கிராமம். இந்தக் கிராமத்தில் சிறுபோகம், பெரும் போகம் என காலபோக அறுவடை நிகழ்ந்து வருகின்றது.

அதாவது, செப்டெம்பர் தொடக்கம் ஜனவரி வரையிலான காலங்களில் பெய்யும் மழை, இக்கிராம மக்களின் பெரும் போக நெல் அறுவடைக்கு பயன்படுகின்றது.

பூநகரியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குடிநீர் இன்மையால் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர். நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை தொடர்ந்தும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, உணவு, கல்வி மற்றும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு பெரும்போக நெற்செய்கை இக்கிராம மக்களிற்கான விளைச்சலைக் கொடுத்து வந்தது.

ஆனால், இன்று கால்நடைகளின் உணவுக்குக்கூட புல் வளர்வதற்கு தகுதியற்ற மண்ணாக பூநகரியின் வடக்கு பகுதியிலுள்ள மண் காணப்படுவதாக விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

1964 ஆம் ஆண்டு, பூநகரி பிரதேசத்தின் இரு முனைகளிலும் கொண்டல் மற்றும் கச்சான் காற்று வீசியதனால், பூநகரி வடக்கு பிரதேசத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலப்பரப்புக்களில் கடல் உப்புநீர் புகுந்து மண்ணின் அனைத்து வளங்களையும் அள்ளிச் சென்றது.

பூநகரி மண் வளங்கள் அனைத்தையும் இழந்ததுடன், மக்களை அவலத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இக்கிராமத்தில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களிற்கு முகம்கொடுத்து வந்தனர்.

இக்கிராம மக்கள் தமது நிலங்களில் நெற்செய்கையை மேற்கொண்ட நிலையில், மண்ணின் தரமின்மை காரணமாக நெற்செய்கை விளைச்சலைக் கொடுக்கவில்லை. விவசாயிகள் பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு பஞ்சம் பிழைப்பவர்களாக செல்லத் தொடங்கினார்கள்.

பூநகரி மண், 88 வீத முளைதிறன் வளம்மிக்க மண்ணாக இலங்கை அரசாங்கத்தினால் போருக்கு முன்னரான காலத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தது. ஆனால் இன்று கடல் நீர் உட்புகுந்தமையினால், நன்னிலம் வளமிழந்து பாழடைந்த நிலமாக மாறியுள்ளது என்று கவலையுடன் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு பின்னர், பூநகரி வடக்கு பிரதேசத்திலுள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய காணியில், கடலுக்கு அண்மித்துள்ள ஏழாயிரம் ஏக்கர் காணி, உவர் நீராக மாறியுள்ளது. எஞ்சிய காணிகளில் விளைச்சல் பற்றாக்குறையாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஞானிமடம், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, நல்லூர், ஆலங்கேணி போன்ற சகல பகுதிகளிலும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

பிரதேச சபையினால் வேறு இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அது போதாமலுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கிவருகின்றனர்.

இது தவிர பூநகரியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குடிநீர் இன்மையால் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இதனால் பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்னீர்க் கிணறுகள் ஒருங்கே அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.