வடமாகாணம்

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேறவில்லை

175 குடும்பங்கள் பாதிப்பு - தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்வதாக முறைப்பாடு
பதிப்பு: 2018 ஒக். 15 22:03
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 23:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வர பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் சுமார் 30 வருடங்களாக கையளிக்கப்படாத நிலையில் காணிகளின் சொந்தக்காரர்களில் அநேகர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி, நாகதாழ்வு, பள்ளமடு, பெரியநாவற்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய போர் காரணமாக தமது தாயகப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி மன்னார் நகரிலும் வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர்ந்தனர். இதன் காரணத்தினால் இந்தக் கிராமங்கள் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன.
 
இந்தக் கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள மன்னார் - தள்ளாடி இராணுவ முகாமின் பாதுகாப்பை முன்னிட்டே இக் கிராமங்கள் அனைத்தும் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் கொண்டு வரப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள் அதிகமுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக இப்பிராந்தியம் இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர் சில பகுதிகளில் இருந்து மாத்திரம் அழுத்தங்கள் காரணமாக வெளியேறி வருகின்றனர்.

திருக்கேதீஸ்வரம்
மன்னாரில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரம் கோவிலில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள மாதோட்ட ரஜமகா விகாரைக்கான வழிாட்டியாக ஏ-32 வீதியில் புதிய அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தினரே இந்த அறிவித்தல் பலகையை நாட்டியுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் மன்னார் திருகேதீஸ்வரம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் குடியிருக்கும் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதி மக்கள் கடும் விசனமடைந்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் திருகேதீஸ்வர பகுதி வாழ் தமிழ் மக்களின் பெருமளவு ஏக்கர் விஸ்தீரணம் உள்ள காணிகளை கடந்த 30 வருடங்களாக ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இந்தக் காணி உரிமையாளர்கள் மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, உட்பட இந்தியாவின் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தருமாறு பல கோரிக்கைகளை திருக்கேதீஸ்வர மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் இராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை என மக்கள் கூறுகின்றனர். அத்துடன் இலங்கை இராணுவம், இலங்கை தொல்பொருள் திணைக்களம், இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஆதரவுடன், பௌத்த பிக்குமார் பௌத்த விகாரை ஒன்றை அமைத்துள்ளனர்.

இதனால், திருக்கேதீஸ்வர பகுதியில் உள்ள தமது காணிகளை இழந்த 175 தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.