கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு ஓமடியாமடு கிராமத்தில் கடும் வெப்பத்தினால் பயன்தரும் கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் கவலை

மிருக வைத்தியர் இல்லை - கால்நடை வருமானத்தை நம்பியிருக்கும் குடும்பங்கள் பாதிப்பு
பதிப்பு: 2018 ஒக். 16 23:16
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 22:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கால்நடைகளுக்கான வைத்தியர் இல்லாமையினால் வாய்ப்புண் மற்றும் குர நோய்களினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் உள்ள கால்நடைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உரிமையார்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ஓமடியாமடுவில் கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தினால் வாய்ப்புண் மற்றும் குரநோய்களினால் அதிகளவான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட இக் கிராமத்தை யாரும் கவனிப்பதில்லையென பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
விலங்கு வேளாண்மை மற்றும் விவசாயத்தை தமது ஜீவனோபாயத் தொழிலாக கொண்டுள்ள இந்தக் கிராம மக்களின் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கு மிருக வைத்தியசாலையோ அல்லது ஒரு கால்நடை வைத்தியரோ இல்லை.

இதனால் கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையார்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஓமடியாமடு கிராமத்தில் வசிக்கும் மக்கள் கூட சிகிச்சை பெற வேண்டுமானால் சுமார் 12 கிலோமீற்றர் தூரம் சென்றுதான் சிகிச்சை பெறவேண்டும்.

சீரான போக்குவரத்து இங்கு இல்லை என்பதுடன் பாதைகளும் குன்றும் குழியுமாக காணப்படுவதனால் அவசரமான நிலையில் சிகிச்சை பெற முடியாது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளின் மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டு தமது வாழ்க்கைச் செலவை நடாத்தும் இந்த மக்களின் குறைகளை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

ஓமடியாமடுக் கிராமத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து தமது முகத்தைக் காட்டிவிட்டுச் செல்வார்கள் எனவும் பெரும் விசனமடைகின்றனர்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மேய்ச்சல் தரை காணியில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிங்கள விவசாயிகள் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பாக இரு மாவட்டங்களின் அரச அதிபர்களிடமும் ஏலவே முறையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் எல்லை பிரதேசத்திலே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேய்ச்சல் தரைக்கான காணி பல வருடங்கள் சென்ற பின்னரும் கூட இதுவரை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.