வடமாகாணம் - வவுனியாவில்

காஞ்சூரமோட்டையில் குடியேறும் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

ஆனால் பிரதி அமைச்சர் மஸ்தான் மறுப்பு- நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி
பதிப்பு: 2018 ஒக். 16 10:17
புதுப்பிப்பு: ஒக். 16 11:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வவுனியா- காஞ்சூரமோட்டை பகுதியில் குடியேறும் மக்களுக்கும், மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளுக்கும் இல்ங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாதுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமக்கு உரியவை எனத் தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
 
இதற்கு, ஜனாதிபதியின் இணைப்பாளரும் அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவருமே, காரணம் என தற்போது தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், குறித்த நபர்கள், மீள்குடியேறிய மக்களுக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், குறித்த நபர் ஜனாதிபதியின் இணைப்பாளர் இல்லை எனவும் அந்த நபர் ஜனாதிபதியின் குறித்த சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நபரெனவும் தெரிவித்தார்.

அவருடைய செயற்பாடுகள் ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமாக இருந்தால், இது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமங்களான காஞ்சூரமோட்டை, காட்டுப் பூவரசங்குளம், நாவலர் பாம் ஆகிய பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதற்கு இலங்கை வன இலாகா அதிகாரிகளும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருவதாக மக்கள் கடந்த செப்டெம்பர் மாதம் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் இலங்கை வனவளத் திணைக்களத்தினர் அடாவடித்தனமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக தமது பூர்வீக நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் ஈழத்தின் பல பாகங்களிலும். உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வசித்துவரும் நிலையில் தற்போது தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர செல்கின்றனர்.

எனினும் மக்களது பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவம், இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன தமிழ் மக்களை தமது சொந்த இடங்களில் மீள குடியேறவிடாது தடுத்து வருவதாக காணிகளை இழந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

இந்த செயற்பாடானது வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.