வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி 1 வருடத்திற்கும் மேலாக போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா?

போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வதற்கான சதித்திட்டம் என உறவினர்கள் விசனம்
பதிப்பு: 2018 ஒக். 18 09:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 21:15
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் ஆறாயிரம் ரூபா வழங்குமாறு மைத்திரி - ரணில் தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆறாயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையானது 1 வருடத்துக்கும் மேலாக தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் முயற்றி என முல்லைத்தீவைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
 
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு போரின் போதும் அதன் பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை தெரிவிக்குமாறும் வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 1 வருடத்துக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளங் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் உட்பட தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சிக்கு வந்த மைத்திரி - ரணில் அரசாங்கமும் பல வாக்குறுதிகளை வழங்கி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

இந்தநிலையில் தான் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த உறவுகள் தமது உறவுகளைத் தேடி வீதியோரங்களில் கடந்த 1 வருடத்துக்கும் மேலாக காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் வெளியுலகிற்கு நல்லாட்சி நடத்துவதாக சூளுரைக்கும் மைத்திரி - ரணில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக தாம் அக்கறை செலுத்துவது போன்று தாமே குழுவொன்றை உருவாக்கி அதன் ஊடாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றன.

எனினும் கொண்ட கொள்கையில் உறுதி தளராத மக்கள் இது ஒரு கண்துடைப்பு நாடகம் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சாலிய பீரிஸின் கருத்தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் விரைவில் அது தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இணைப்பாளராக செயற்படும் ஈஸ்வரி கூர்மை செய்தி தளத்திற்கு கருத்து தெரிவித்தார்.