வடமாகாணம் - வவுனியாவில்

பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்துவதற்கு அச்சமாக உள்ளதாக மக்கள் விசனம்

இலங்கை அரசாங்கம் உட்பட மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி
பதிப்பு: 2018 ஒக். 18 21:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 22:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் நகரை அண்டிய பகுதிகளோடு முடிவடைந்து விடுவதால் கிராமப்புற மக்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லலுறுவதாக வவுனியா - குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் உட்பட அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். நீண்டகாலமாக இந்த வீதி குன்றும் குழியுமாகவே காட்சியளிக்கின்றது.

பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் இவ்வீதியைப் புனரமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

100 மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் காணப்படுவதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு தமது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.

இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்கில் கடந்த காலங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக பிரசாரம் செய்கின்றது.

அவ்வாறு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் கண்துடைப்புக்காக நகரை அண்டிய பகுதிகளில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் வீதிகள் உட்பட கட்டுமாணப் பணிகள் எவையும் கிராமப் புறங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இலங்கையின் ஒற்றையாட்சி அரசாங்கம் மாத்திரமன்றி இந்த மாதத்துடன் தமது ஆட்சியை நிறைவு செய்யவுள்ள வடக்கு மாகாண சபையும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.