கடத்தல் முயற்சி முறியடிப்பு

பொது மக்களுக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையே தர்க்கம், மன்னாரில் சம்பவம்

இலங்கை புலனாய்வு பரிவினர் என்றும் சந்தேகம்
பதிப்பு: 2018 மே 18 15:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 21 15:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபடும் குடும்பஸ்த்தர் ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்ட குழுவினர், துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை அச்சுறுத்தினர் என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.
 
நேற்று வியாழக்கிழமை இரவு 7.30க்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை நிற கார் ஒன்றில் சிவில் உடையில் சென்ற எட்டுப்பேர் கொண்ட குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

குறித்த இளம் குடும்பஸ்த்தரின் வாகன சாரதியை பிடித்து அவரை தாக்கி கை விலங்கிட்டு தமது வாகனத்தில் ஏற்றிய துப்பாக்கிதாரிகள், பின்னர் முன்னாள் போராளியின் வீட்டுக்குச் சென்று அவரை கடத்திச் செல்ல முற்பட்டனர்.

இதனால் அயலவர்களும் உறவினர்களும் எட்டுப்பேர் கொண்ட ஆயுதக்குழுவுடன் தர்க்கப்பட்டனர். வாகனத்தில் கைவிலங்கிடப்பட்டிருந்த குடும்பஸ்த்தரின் சாரதியையும் மீட்டனர். இதனால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர் என்று பிரதேச மக்கள் கூறியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார்.

தப்பிச்செல்லும்போது பொதுமக்களை தாக்கியதாகவும் பிரதேச மக்கள் கூறுவதாக செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவ இடத்தில் வெற்று ரவைகள் 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவை பொது மக்களால் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு மக்கள் தகவல் வழங்கியுள்ளனர். அதேவேளை உடனடியாக அங்கு சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், சம்பவம் குறித்து அறிந்து கொண்டார். பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக உறுதியளித்தனர் என்று கூறியதாக கூர்மை செய்தியாளர் தெரிவித்தார். அங்கு காணப்பட்ட தடையப்பொருட்களான வெற்று ரவைகள் 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவற்றையும் பொலிஸார் எடுத்துச் சென்றதாகவும் செய்தியாளர் கூறினார்.

அதேவேளை குறித்த இளம் குடும்பஸ்த்தர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து, 2009 ஆண்டுக்கு முன்னரே விலயதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடத்திச் செல்ல முற்பட்ட எட்டுப் பேர் கொண்ட ஆயுதக்குழுவினர் இலங்கை புலானாய்வு பிரிவினர் எனவும் அவர்கள் கொழும்பில் இருந்து வந்ததாகவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கூர்மை செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் புலானாய்வார்கள் எவரையும் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக கூர்மை செய்தியாளர் கூறினார்.

உயிலங்குளம் மன்னார் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது.