சொந்த அரசியல் தேவைக்காகவே ஜனாதிபதியும் பிரதமரும் யாழ் வருகை

தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை

மைத்திரிபாலவும் ரணிலும் பிரித்தாள முயற்சி என்றும் கண்டனம்
பதிப்பு: 2018 ஜூன் 14 14:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 15 10:29
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயக பிரதேசங்களில் செய்து முடிப்பதே ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் முக்கிய நோக்கம் என்றும் கூறியுள்ளனர். அவைத் தலைவர் சிவஞானம், உறுப்பினர்களான கலாநிதி சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம். பரஞ்சோதி ஆகியோர் இவ்வாறு கூறியுள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை. ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிக் கூறுவது இனவாதம் அல்ல- கலாநிதி சர்வேஸ்வரன்.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட செயலணி நடவடிக்கை எடுப்பது குறித்தும், இந்த விவகாரங்கள் பற்றி அதிகாரபூர்வமாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு அறிவிப்பது எனவும் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பக்கபலத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். முல்லைத்தீவுக்கும் சென்று சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்துமுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. கூடிய விரைவில் சிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள்ப்படும் என சந்திப்பில் பேசப்பட்டதாக உறுப்பினர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழர் தயாகப் பிரதேசங்களில் குறிப்பாக வடமாகாணத்தில், மக்களின் காணிகள் ஆக்கிரிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றது. அதேநேரம் தமிழர் தாயக பிரதேசங்களைச் சேராத, இலங்கையின் தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களை அழைத்து வந்து, இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் குடியேற்றம் இடம்பெறுவதாக சிவாஜிலிங்கம் கூறினார்.

வடக்கு மாகாணத்தில், கொழும்பு அரசாங்கம் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கின்றது. குறிப்பாக மாகாண சபையை புறந்தள்ளி தன்னுடைய திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனிப்பதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் அவர்கள் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே கூறுவதாகவும் கலாநிதி சர்வேஸ்வரன் கூறியுள்ளார்.

இதேவேளை கொழும்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தங்களுக்கிடையேயான அரசியல் போட்டி காரணமாகவே வடமாகாண சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைத்து வருவதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றம் சுமத்தியுள்ளார்.