திருகோணமலைக்கு வந்த

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி அறியும் அலுவலர்களை வெளியேறுமாறு மக்கள் போராட்டம்

ஒற்றையாட்சி அரசின் ஆணைக்குழுக்கள், அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லையெனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 ஜூன் 15 19:07
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 00:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர் இடம்பெற்றபோது காணாமல் ஆக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று கூறிய கொழும்பு அரசாங்கம், எதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அறியும் அலுவலகத்தை அமைத்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உறவுகளின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். கொழும்பை மையப்படுத்தி செயற்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை கண்டறிவதற்கான அலுவலக அதிகாரிகள், 13 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலைக்குச் சென்றிருந்தனர். அந்த அதிகாரிகளை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது குறித்து கூர்மை செய்தித் தளத்திற்கு வியாழக்கிழமை கருத்து வெளியிட்ட அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீதும் அந்த அரசின் உயர் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இல்லையென்று கூறினார்.
 
திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. யுத்தத்தின்போது கடத்தப்பட்டும் சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு வலியுறுத்தி திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றரை வருடமாக போராடி வருகின்ற உறவினர்கள் உட்பட வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் போராடிவரும் உறவினா்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொணடனர்.

நான்கு முறை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

ஆனால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற விடயம் எனவும், தன்னுடைய ஆட்சியில் இரகசிய முகாம்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களோ இல்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் .

அவ்வாறு ஜனாதிபதி மைத்திரி கூறுவது போன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை எனில், எதற்காக இந்த அலுவலகத்தை அரசு அமைக்க வேண்டும் என நாகேந்திரன் ஆஷா கேள்வி எழுப்பினார்.

சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கில் இலங்கை அரசு செய்கின்ற மழுங்கடிப்பே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் நடைபெற்றபோதும் அதற்குப் பின்னரான காலத்திலும் பல ஆணைக்குழுக்களை கொழும்பு அரசாங்கம் அமைத்திருந்தது. அந்த ஆணைக்குழுக்களின் அதிகாரிகளும் இங்கு வந்து எங்களை சந்தித்து முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர். நாங்களும் நடந்த எல்லாவற்றையும் கூறியிருந்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

எமது பிள்ளைகள் தாமாக காணாமல் போகவில்லை. இலங்கைப் படையினரிடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று இந்த அதிகாரிகளிடம் கூறினோம். அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த அலுவலகத்தின் காலம் எவ்வளவு என்று கேட்டபோது. மூன்று வருடங்கள் செயற்படும் என்று பதிலளித்தனர். அப்படியானால் அந்த மூன்று வருடங்களின் பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள்? எங்களுக்கு என்ன தீர்வு தருவீர்கள்? என்று மீண்டும் கேட்டோம்.

அதற்கு அந்த அதிகாரிகள் சொன்னார்கள், மூன்று வருடங்களின் பின்னரும் வேண்டுமானால் செயற்படுவோம் என்று. ஆனால் நாங்கள் ஏற்கனவே ஒன்றரை வருடங்களாக போராடி வருகின்றோம். இந்த நிலையில் உங்களால் தீர்வு தர முடியுமா எனக் கேட்டோம்.

அதற்கு அவர்கள் சொன்னார்கள், அப்படி சத்தியவாக்காக எதையுமே கூற முடியாது. ஆனால் முடிந்தவரை உங்களுடன் ஒத்துழைத்து செயற்படுவோம் என்றார்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமே இல்லையென இலங்கை ஜனாதிபதியும் இலங்கைப் பிரதமரும் எங்களிடம் கூறினார்களே என்று அந்த அதிகாரிகளிடம் சொன்னபோது, ஜனாதிபதியும் பிரதமரும் உங்களிடம் அவ்வாறு கூறினார்களா? என்று அந்த அதிகாரிகள் எங்களிடம் திருப்பிக் கேட்டனர்.

ஜனாதிபதி மைத்திரி புதியவர் அல்ல. யுத்தம் நடைபெற்றபோது அவர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருந்தார். இவர் ஜனாதபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தமிழர்களின் வாக்குகளை பெற்று பதவிக்கு வந்தவர்.

ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவி்ன் ஆட்சியை மட்டும் இவர் எப்படி குறை கூறிக் கொண்டிருக்க முடியும்? என்று நாங்கள் கேட்டோம். ஆட்சிக்கு வருவது மாத்திரமே அவருடைய நோக்கமாக இருந்தது. எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், இவரால் நியமி்க்கப்ப்ட இந்த அலுவலகம் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமே இல்லையென்றே கூறப்போகின்றது. ஆகவே இதை நாங்கள் ஏற்கத் தயாரில்லை.

ஆணைக்குழுக்கள் அல்லது விசேட அலுவலகங்கள் அமைத்து நிவாரணம் வழங்குவதோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிடம் மரணச்சான்றிதழ் கையளிப்பதோ தீர்வல்ல.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இலங்கைப் படையினரிடம் சரணடைந்த உறவுகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும்.

சரி, எங்களின் பிள்ளைகளைத்தான் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாமே என்று இவர்களை கேட்டோம்.

முதற்கட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். குறைந்த பட்சமாக அவர்களது பெயர்ப் பட்டியலையாவது வெளியிட வேண்டும்.

அதன் பின்னரே அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திப்போம். அதுவரையில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உடன்படப்போவதில்லை. இந்த அலுவலகத்துடன் ஒத்துழைத்துச் செயற்படவும் முடியாதென நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்.

அதேவேளை, தமிழ் அரசியல் தலைமைகளின் பொறுப்பின்மையாலேயே வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.