மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம்

தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஐக்கியதேசியக் கட்சி- மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவும் ஏற்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு உறுப்பினர்கள் ஆதரவு?
பதிப்பு: 2018 ஜூன் 29 08:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 29 18:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அடுத்த ஆண்டு முற்பகுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்பட்டு வரும் நிலையில், ஆண்டின் இறுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இதனிடையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் 106 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கியதேசியக் கட்சி, எட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால். 114 உறுப்பினர்களோடு சாதாரண பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியை அமைக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்புவதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைத்தால், 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மேலும் தனது அணியின் நிலையை பலப்படுத்த முடியும் என மஹிந்த ராஜபக்ச நம்புவதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதற்கான முயற்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு உறுப்பினா்களுடன் ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேச்சு நடத்தியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய, இலங்கை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்று வி;யாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற சந்திப்பில் இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் கலந்துகொண்ட மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் 2020ஆம் ஆண்டு வரை, ஜனாதிபதித் தேர்தலையோ. நாடாளுமன்றத் தேர்தலையோ நடத்த வேண்டிய அவசியம் இல்லையென மஹிந்த சேதப்பிரியவிடம் கூறியதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்பு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அடுத்த மாதம் ஐந்தாம் ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை நடத்தவுள்ளதாக மஹிந்த தேசப்பிரியவிடம் சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறியுள்ளார்.

சபாநாயகர் கருஜெயசூரிய, அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை. அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவை பெறுவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லையென அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த இழுபறிக்கு மத்தியி்ல், எதிர்வரும ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ள வடமாகாண சபையின் பதவிக்காலம் உள்ளிட்ட ஐந்து மாகாண சபைகளின் தேர்தல்களை ஆண்டின் இறுதியில் நடத்த இலங்கைப் பிரதமர் ரணில் ஆலோசித்து வருவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்னணியிலேயே, சபாநாயகர் கரு ஜயசூரியவும் டிசம்பர் மாதம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைத்து 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தின் பதவிக்காலத்தை நீடித்தால். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அதன் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிமைப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்புவதாக அவருக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

தனது அரசியல் அணியின் பலத்தை மேலும் ஸ்திரப்படுத்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியை, மஹிந்த ராஜபக்ச வரவேற்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.