ராஜபக்க்ஷ குடும்பத்தை நோக்கி அமெரிக்கா

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்த மூலத்தை வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை

விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவிப்பு- சீனச்சார்பு நிலையில் ரணில்?
பதிப்பு: 2018 ஜூலை 07 22:54
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 08 08:35
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் 2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் செலவுக்காக மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு சீனா 7.6 மில்லியன் ரூபாய்கள் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரிகையான நியூயோர்க் ரைம்ஸ் கடந்த 25 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தி இலங்கைப் பத்திரிகைகளில் வெளியாகி பின்னரே மஹிந்த ராஜபக்க்ஷவும் மறுத்திருந்தார். சீன அரசாங்கமும் அதிகாரபூர்மாக அந்தச் செய்தியை நிராகரித்தது. இந்த நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் இருந்து ஆதாரங்களைக் கோரியுள்ளது. நிதி வழங்கல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துவதற்கு வசதியாக குறித்த செய்தி தொடர்பான அடிப்படை மூலங்கள் அவசியம் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
ஆனால் இதனை கொழும்பில் உள்ள அமெரிக்கத் துாதரகம் உறுதிப்படுத்தவில்லை.

செய்தியின் மூலத்தை குறித்த பத்திரிகையிடம் கோருவதென கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடி முடிவெடுத்ததாக கட்சித் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சி, அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த 1983ஆம் ஆண்டு முதல், 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்கும் வரை அமெரிக்கச்சார்புடைய கட்சியாகவே இருந்தது.

ஆனால், இது குறித்துக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைச் செய்தி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையெனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் செய்திக்கான மூலங்களைக் கோரியுள்ளமை தொடர்பாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு 7.6 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளதாக நியூயோர்க் ரைமஸ் பத்திரிகை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பாக மஹிந்த ராஜபக்க்ஷவும் அவரை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியும் ஒரு வாரத்தின் பின்னரே அதிகாரபூர்வமாக மறுப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் ஐக்கியதேசியக்கட்சி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சீனாவுடன் இருந்த நெருக்கமான உறவுகள் குறித்து விமர்சித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்க்ஷவை விமர்சித்து வருகின்றது. ஆனாலும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைச் செய்தி தொடர்பான நம்பகத்தன்மை குறித்து அமைச்சர் நிமல் சிறிகால டி சில்வா கேள்வி எழுப்பியிருந்தார்.

நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைச் செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜே.வி.பி. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளை நோக்கி குற்றம் சுமத்தியிருந்தது.

அதாவது, இந்தியா, சீனா மற்றும் மேற்குலகாநாடுகளிடம் பணம் பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுப் பின்னர் அந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப செயற்படுகின்ற நிலைமை குறித்து ஜே.வி.பி கடுமையாகச் சாடியிருந்தது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தை விட இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை கடந்த ஒரு வாரமாக இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கின்றனர்.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்க்ஷவை அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு அமெரிக்கா இரகசிய நகர்வுகளை மேற்கொள்கின்றதா என கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், நியூயோர்க் ரைமஸ் பத்திரிகையில் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சீனா நிதி கொடுத்த செய்தி கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளிவந்துள்ளன.

ஆனால், இந்தச் செய்தி அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட முறையில் வெளியிடப்பட்டது என்றும், அமெரிக்கச் சார்புடைய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபயவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு அமெரிக்கா முற்படுவதாகவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

ராஜபக்க்ஷக்களின் பக்கம் அமெரிக்கா இல்லை என்பதை இலங்கையின் தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளும், அதேவேளை தமிழ்க் கட்சிகளும் நம்ப வேண்டும் என்பதற்காகவே நியூயோர்க் ரைம்ஸ் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்ததாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் போராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் கடந்த திங்கட்கிழமை சென்ற கோட்டபய ராஜபக்க்ஷ, அங்கு முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சரான அவரது சகோதரர் பசில் ராஜபக்க்ஷ, அவரது மற்றுமொரு சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சீனா 7.6.மில்லியன் நிதி கொடுத்தது என்ற செய்தி நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி இலங்கையின் தென்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழலிலேதான், கோட்டபய, ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்கச் சார்புடையவர். ஆனால், கோட்டபாயவுடன் நீண்ட முரண்பாடுகள் கொண்டவர்.

எனினும் நியூயோர்க் ரைமஸ் பத்திரிகைச் செய்தி குறித்தும், கோட்டபய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் கொழும்பில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்று உரையாடியமை குறித்தும் வெளிப்படையாக கருத்துக் கூறாமல் அமைதியாகவே இருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி, அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன இலங்கை ஜனாதிபதியாக பதவி வகித்த 1983ஆம் ஆண்டு முதல், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியேற்கும் வரை அமெரிக்கச்சார்புடைய கட்சியாகவே இருந்தது.

நேர்வேயின் சமாதான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட, 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில். ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக அமெரிக்கா கடும் முயற்சியும் எடுத்திருந்தது.

இவ்வாறான அரசியல் நெருக்கம், அமெரிக்காவுடன் இருந்த சூழலில். எந்தக் காரணத்தின் அடிப்படையில் சீனாச் சார்பு நிலைக்கு ரணில் விக்கிரமசிங்க சென்றார் என்பது குறித்து கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அமைச்சர் மங்கள சமரவீர தனது அமெரிக்கச் சார்பு நிலையில் இருந்து மாற்றமடையப் போகின்றாரா அல்லது அமெரிகாவையும் சீனாவையும் சமாந்தரமாகக் கையாளக் கூடிய இராஜதந்திர ஆற்றல் அவரிடம் இருக்கின்றதா என்றும் கேள்விகள் எழுகின்றன.

அதேவேளை, ராஜபக்க்ஷ குடும்பம் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, ஜெனீவா மனித உரிமைச் சபையில் 2012ஆம் போர்க்குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா, தற்போது ராஜபக்க்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முற்படுகின்றது.

ராஜபக்க்ஷ சகோதரர்கள் மீண்டும் ஒற்றுமையாக வேண்டும் என மஹிந்த ராஜபக்க்ஷவின் மூத்த சகோதரர், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச கொழும்பில் இன்று சனிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இறுதிக்கட்டப் போருக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுள் நேரடியாகவே ஒத்துழைப்பு வழங்கியிருந்தன என்று கோட்டபய ராஜபக்க்ஷ அன்று வெளிப்படையகவே கூறியிருந்தார். ஆனால், ரணில் விக்கிரமசிங்க இதுவரை அவ்வாறு கூறவேயில்லை.

ஆனால், இந்தியா, சீனா ஆகிய நாடுகளை சமாந்தரமாக கையாளுவதாக, ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.