2009 ஆம் ஆண்டு மோ மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் தாயகம்

முல்லைத்தீவில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- கிழக்கு மாகாண இணைப்பைத் தடுக்க புதிய முயற்சியா?

மக்களின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 செப். 24 00:04
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 24 09:38
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தி்ன் பின்னரான சூழலில் இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டம், இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கனக்கான உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும், சந்தித்தது. ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரச திணைக்களங்கள் ஆகியவற்றினால் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
 
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோர் இலங்கை அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் முறையிட்டிருந்தனர்.

காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகவும் காணிப்பயன்பாடு 2 இலட்சத்து 51 ஆயிரத்து 690 ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதியில், அனைத்து வகையான பொருளாதார வளங்களை தன்னகத்தே உள்ளடக்கியவும் கொண்ட மாவட்டம் முல்லைத்தீவு.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டமை உண்மைதான்.

ஆனால், சொந்த இடத்திற்குச் சென்றால் நிம்மதியாக வாழலாம் என்ற மன உறுதியோடு மீள்க் குடியமர்ந்த மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று பேரதிர்ச்சியே காத்திருந்தது.

மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட விவசாய நிலங்களும் இலங்கை இராணுவத்தினால் ஏலவே அபகரிக்கப்பட்டிருந்தன. இதனால் காணி உரிமையாளர்களான மக்கள் மாதிரிக்கிராமம் என்ற பெயரில் அரச காணிகளில் மீண்டும் தறப்பாள் கொட்டகைகளில் குடியேற்றப்பட்டனர்.

மீண்டும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது சொந்தக் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் பல தடவை எடுத்துக் கூறியபோதும். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை எனறே அமைச்சர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

அமைச்சர் ராஜித சேனரட்ன சிங்களக் குடியேற்றம் என்பதை முற்றாகவே மறுக்கின்றார். ஆனால் சிங்கள மக்களுக்கு வடமாகாணத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டும் என்றும் சொல்கின்றார்.

முல்லைத்தீவில் புத்தர் சிலைகள் வைக்கப்படவேயில்லையென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

ஆனால், கொழும்பில் உள்ள இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்குக் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஆராய கடந்த ஜூன் மாதம் வடமாகாண சபை செயலணி ஒன்றை உருவாக்கியிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, முல்லைத்தீவு மக்களின் பிரதான பொருளாதார தொழில்களாக விவசாயம், மீன்பிடி என்பன காணப்படுவதுடன் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் காணப்படுகின்றன.

ஆனால் அந்தத் தொழில்களைக் கூட அந்த மக்கள் செய்ய முடியாதவாறு இலங்கை இராணுவம் சிங்கள மக்களை முல்லைத்தீவில் குடியமர்த்துவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

என்பதாயிரும் ஏக்கர் காணிகளை இலங்கை அரச திணைக்களங்கள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரித்துள்ளதாகவும் ரவிகரன் ஏலவே கூறியிருந்தார்.

முல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றனர்.

கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்ட முல்லை மாவட்டத்தின் நில உயரமானது கடல் மட்டத்திலிருந்து 36 தசம் 5 மீற்றர் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மாவட்டத்தின் 70 கிலோமீற்றர் நீளமுடைய வளமான கடற்கரை படுக்கையும் ஏரிகளும் மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும்.

பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித் தொழில் காணப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவுகின்றது.

வடமாகாண சபை
முல்லைத்தீவில் அதிகரித்து வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர்கள் கடந்த ஜூலை மாதம் நேரில்ச் சென்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம். கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதைத் தடுக்கும் நோக்கில் திருகோணமலை- முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுவதாக மக்கள் கூறுகின்றர். 1980களில் ஐக்கியதேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது மணல் ஆறு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 2015 இல் இந்தியா மற்றும் அமெர்க்கா உள்ளிட்ட மேற்குநாடுகளின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கம் அதன் தொடர்ச்சியை நிறைவேற்றி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழல் வசதியாக அமைந்து விட்டதாக மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களாக இடம்பெற்ற இடப்பெயர்வு என முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன.

இருப்பினும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரன நிலையில் அவர்களுக்கு இழப்பு என்பது தொடர்கதையாகவே தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறுகின்றார்.

ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், மீன்பிடித்தலுக்கு, இராணுவ ரீதியான தடைகளை விதித்ததுடன் கண்காணிப்பு என்ற பெயரில் மீனவர்களது சுதந்திரமான தொழிலுக்கும் தடைவிதித்திருந்தது.

இதன் பின்னர் மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் அவர்களின் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணாகவும், ஆனால் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் அரங்கேறி வருகின்றன.

தமிழ் மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் இலங்கையின் வேறு பகுதிகளிலிருந்து பெருமளவில் வந்த சிங்கள மீனவர்களினால் சிதைக்கப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டன.

நிலைத்திருக்கக்கூடிய உள்ளூர் மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கும் பொறுப்பையுடைய இலங்கையின் மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் விஜதமுனி சொய்சா, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால், குறித்த பிரச்சனை தீர்வின்றி தொடர்கின்றது. சட்டவிரதோ மீன்பிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாகக் கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

இவை ஒருபுறம் இருக்க விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் விவசாயம் செழிப்படைந்து காணப்பட்டது.

எனினும் தாயகப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையுடன் ஆரம்பித்த அழிவு, இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. விவசாய நிலங்களாக காணப்பட்ட பகுதிகள் தரிசு நிலங்களாக மாற்றமடைந்துள்ளன. மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இது மாத்திரமன்றி ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்களை அபகரித்துள்ள இலங்கை இராணுவம் அதில் முகாம்களை அமைத்துள்ளதுடன் தமது தேவைக்காக விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதன்காரணமாக அன்றாட உணவுத் தேவையைக் கூட கொண்டு நடத்த முடியாது அல்லலறும் விவசாயிகள் உட்பட பொதுமக்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 2 இலட்சத்து 51 ஆயிரத்து 690 ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதியில் அனைத்து வகையான பொருளாதார வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இவற்றில் காட்டுப்பகுதி 167,850 ஹெக்டேயராக மாவட்டத்தில் 64 தசம் 1 வீதத்தைக் கொண்டுள்ளது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21 ஆயிரத்து 390 ஹெக்டேயராக 5.2 வீதத்தைக் கொண்டுள்ளது. விவசாய நிலமாக 44 ஆயிரத்து 40 ஹெக்டேயராக மாவட்டத்தில் 5 தசம் 1 வீதத்தைக் கொண்டுள்ளதுடன் ஏனையவை மக்கள் வசிப்பிடங்களாக காணப்படுகின்றன.

இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர்.

நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன.

முல்லை மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை.

இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.

போரின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர்.

வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், போருக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை.

இவை மாத்திரமன்றி முல்லைத்தீவின் பிரதான வளமாக விளங்கிய காடுகளை அழித்து அங்கு குடியேற்றங்களை உருவாக்கும் செயற்பாடும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது.

இந்த நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை கடந்த ஜூலை மாதம் திரட்டியதாக மக்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையிலேதான் தமிழர்கள் இன, மொழி, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்காக போராடவும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவர்களது போராட்டம் அதிகார தரப்பிற்கும், ஒடுக்குபவர்களுக்கும் எதிராகவே இருக்கின்றது. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசாங்கத்திற்கெதிராக போராடுகிறார்கள், கேப்பாபுலவில் இலங்கை இராணுவத்திற்கெதிராக போராடினார்கள்.

தமிழ்ப் பிரதிநிதிகளினால் பேசப் பயந்த விடயங்களை மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் பேச ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தலைவர்களால் தீர்வு கிடைக்காத பிரச்சினைக்கு மக்கள் போராடி தீர்வு பெற முற்படுகின்றனர்.

அது போலதான் தமது இனப்பரம்பலை சிதைக்கும் செயற்பாட்டிற்கெதிராகவும் தமது வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழர் தாயகத்திலே தமிழ் மக்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கின்ற விடயங்களே அதிகம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது அவற்றையெல்லாம் உரிமைக்காக போராடிய இனம் எத்தனை காலம் அமைதியாக பார்த்துக்கொண்டேயிருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளன.

போராட்டமே வாழ்வாகிப் போன முல்லைத்தீவு மக்கள் மீண்டும் மீண்டும் தெரிவிப்பது தீர்வு கிடைக்கம் வரை பீனிக்ஸ் பறவைகள் போன்று மீண்டெழுவோம் என்பதையே.

ஆனால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இலங்கை நாடாளுமன்றக் கதிரைக்காவே தமிழ்த்தேசியப் பிரச்சினையை பயன்படுத்துகின்றனர் என்பது அவதானிகளின் கணிப்பு.