அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில்

இலங்கைக்கு அமெரிக்கா 480 மில்லியன் நிதியுதவி- பூகோள அரசியல் வியூகத்தின் மற்றுமொரு ஏற்பாடு

ஈழத் தமிழர் விவகாரத்தில் கொழும்பு சொல்வதை நியூயோர்க், புதுடில்லி ஏற்கும்
பதிப்பு: 2018 செப். 26 14:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 27 23:00
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அமெரிக்க நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் திருகோணமலையின் கடல்ப் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் இந்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க தானகவே முன்வந்துள்ளது. மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இதேபோன்ற பயிற்சிகளை இலங்கைக் கடற்படைக்கு திருகோணமலைக் கடற்பரப்பில் வழங்கியிருந்தன.
 
இந்த நிலையில் 480 மில்லியன் டொலர் நிதியுதவியை எதிர்வரும் டிசம்பர் மாதம் வழங்க அமெரிக்காவின் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளினுடைய பூகோள அரசியல் வியூகங்களை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்துவது என்பது குறித்த மாற்றுச் சிந்தனைகளை தமிழ்த் தரப்பு உருவாக்குமா?

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் பூகோள அரசியல் அணுகுமுறைக்குள் இலங்கை அரசை உள்வாங்கும் நோக்கிலும் திருகோணமலையை அமெரிக்காவுக்கு வழங்கியதற்கான நன்றிக் கடனாகவும் இந்த நிதி அமெரிக்காவின் MCC நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன்,(Brock Bierman) சந்தித்து உரையாடினார்.

இந்தச் சந்திப்பு குறித்த நிறுவனத்தினால் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பையும் நிதியுதவியையும் எதிர்பார்த்திருக்கவில்லையென நியூயோர்க்கில் உள்ள இலங்கைச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் 480 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாக புரோக் பியேர்மன் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் 2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு உதவியாக எதிர்வரும் டிசெம்பர் மாதம் கொழும்பில் வைத்து இந்த நிதி கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கொழும்பில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நியூயோர்க்கில் உள்ள இலங்கைச் செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

நிதி கையளிப்பு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், நியூயோர்க்கில் வைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கைப் படையினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை எனவும் மைத்திரிபால சிறிசேன ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்குத் தயாராகவிருந்தார்.

ஆனால், இறுதிநேரத்தில் அவரது உரையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக மைத்திரிபால சிறிசேனவுடன் நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் மனோ கணேசன் இன்று புதன்கிழமை தனது முகநுால் பதிவில் கூறியுள்ளார்.

ஆனாலும், இலங்கைப் பிரச்சினை உள்ளக விவகாரம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கமே தீர்வு காணும் என்றும் அதற்கு ஏதுவான நிலையில் சர்வதேச சமூகம் இடமளிக்க வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன தனது உரையில் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

ஆகவே, சீன அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து இலங்கையை விடுவித்து, தமது பூகோள அரசியல் தேவைப்பாட்டுக்கு ஏற்ற முறையில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் இலங்கையில் தளம் ஒன்றைத் திடமாக அமைத்துள்ளதையே இந்த நகர்வுகள் காண்பிக்கின்றன.

குறிப்பாக திருகோணமலையை மையப்படுத்திய கடந்த ஓகஸ்ட் மாத செயற்பாடுகள் அந்த நகர்வுகளைக் கோடிட்டுக் காண்பிக்கின்றன.

அத்துடன் திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய அரசின் உதவியோடு அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றுக்கு மைத்திரி-ரணில் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இலங்கை இராணுவத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருந்தது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் கடந்த ஓகஸ்ட் மாதம் மாலைதீவு பயணத்தின் பின்னர் கூறியிருந்தார்.

எனவே இதன் தொடர்ச்சியாகவே அமெரிக்கா, இலங்கைக்கு இந்த நிதியுதவிகளை வழங்குகின்றது. இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதமும் இதற்கு உண்டு.

ஏனெனில் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசோடு தென்னாசியக் கடற்படை விவகாரங்கள் தொடர்பான நெருக்கமான உறவை வளர்ப்பதில் அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஈழத் தமிழர் விவகாரத்தில் நியூயோர்க்கும் புதுடில்லியும் கொழும்பு சொல்வதையே ஏற்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் பூகோள அரசியல் தேவைக்கான சகலவிதமான இணக்கத்திற்கும் இலங்கை உடபட்டுள்ளது.

அமெரிகா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் இலங்கை மீதான இச் செயற்பாடுகள் குறித்து, ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்ணாநயக்கா ஏலவே இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆகவே, இறுதிப் போருக்கு உதவியளித்த இந்த நாடுகளின் சர்வதேச வியூகங்களுக்கு மத்தியில், ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என தமிழ்த் தரப்பு மேலும் நம்புவது அர்த்தமற்றது.

இலங்கை விவகாரத்தில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கூட்டை ஜே.பி.வி போன்ற சிங்களக் கட்சி எதிர்க்கின்றது என்பதற்காக தமிழ்த் தரப்பு ஜே.வி.பியோடு சேர்ந்து செயற்படவும் முடியாது.

ஆனால், இந்த நாடுகளுடைய இலங்கை குறித்த பூகோள அரசியல் வியூகங்களை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பான மாற்றுச் சிந்தனைகளை தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டும் என்கிறார் சட்டத்தரணி காண்டீபன்.