வடக்கு - கிழக்கு கடற்பிரதேசங்களை உள்ளடக்கிய

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டின் பின்னர் மைத்திரி சீனாவுக்கும் ரணில் டில்லிக்கும் பயணம்

தமிழ்த்தரப்பு மௌனம்- வல்லரசு நாடுகளின் போட்டியினால் இலங்கைக்குப் பாதிப்பு - மைத்திரி
பதிப்பு: 2018 ஒக். 15 00:04
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 20:11
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்குரியவாறு தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
 
எதிர்காலத்தை திட்டமிடுதல், அதாவது இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

அம்பாந்தோட்டையில் உள்ள இலங்கைக் கடற்படைக்கு 3.6 ஏக்கர் நிலம் ஏலவே உள்ளது. அந்தத் தளத்தை மேலும் விரிவுபடுத்த 15 ஏக்கர் நிலம் தேவை என்றும், இந்தக் கடற்படைத் தளத்தில் உயர் திறன் கொண்ட ராடர்கள் உள்ளிட்ட கண்காணிப்பு பொறிமுறைகள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பாக வரையறை செய்யும் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியான ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியத்துக்கு வெளியே உள்ள நாடுகளின் கடற்படைக் கப்பல்கள், அம்பாந்தோட்டைக்கு எந்தத் தடைகளும் இன்றி வந்து செல்கின்றன. ஆனால் சீனாவின் கடற்படைக் கப்பல் இதுவரை அங்கு வரவில்லை என்றும் றியர் அட்மிரல் பியால் டி சில்வா கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உயர்தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு பொறிமுறை வசதிகளோடு இலங்கைக் கடற்படைக்குரிய பிதான கடற்படைத் தளம் ஒன்றை அமைக்கவுள்ளதாகக் கூறினார்.

இந்து மா சமுத்திர மாநாடு
திருகோணமலை உள்ளிட்ட ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசத்தை மைய்யப்படுத்திய இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு. பயன்பாடுகள் அடங்கலான எதிர்கால வரையறைகள் என்ற தெனிப் பொருளில் சர்வதேச மாநாடு கடந்த 11. 12 ஆம் திகதிகளில் இலங்கைப் பிரதமரின் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இர.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முப்படைத் தளபதிகள் பலரும் பங்குபற்றியிருந்தனர். இந்து சமுத்திரம் தொடர்பாக முரண்பாடுகளிலும் ஓர் உடன்பாடாக இந்த மாநாடு நிறைவடைந்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

அம்பாந்தோட்டைக் கடல் வழியாக சீனாவின் கப்பல்கள் அதிகளவு பயணம் செய்கின்றன. இதனால் அம்பாந்தோட்டைத்துறை முகம் சீனாவுக்கு வசதியாக அமைந்துள்ளதாகவும் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா அந்த மாநாட்டில் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் வணிக நோக்கில் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தத் துறைமுகத்தை சீனா இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தும் என்று பேசப்படுகின்றது. அந்தப் பேச்சுக்கள் வெறுமனே ஊகங்கள் மாத்திரமே எனவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தும் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) கடந்த வாரம் நியூயோர்க்கில் கூறியிருந்தார்.

ஹட்சன் நிறுவனத்தில் இடம்பெற்ற வெளியுறவுக் கொள்கை தொடர்பான விளக்கவுரையின்போது, அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் முன்னிலையில் மைக் பொன்ஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான மாநாடு கொழும்பில் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே மைக் பென்ஸ் இவ்வாறு கூறியிருந்தார்.

இதேவேளை, இந்த மாநாடு முடிவடைந்த நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இந்த வாரம் போலந்து நாட்டுக்குப் பயணம் செய்யவுள்ள மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாத முதல் வாரத்தில் சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

அதேவேளை, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளார். வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.

அம்பாந்தோட்டையில் இந்தியாவின் உதவியுடன் ஆயிரத்து 200 வீடுகள் அமைப்பதற்கான உடன்படிக்கை நேற்றுச் சனிக்கிழமை கையெழுத்திடப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளார்.

600 மில்லியன் ரூபா செலவில், 50 மாதிரிக் கிராமங்களில் ஆயிரத்து 200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்கான உடன்படிக்கையில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, இலங்கையின் வீடமைப்பு நிர்மாண அமைச்சின் செயலர் பேனாட் வசந்தவும் கைச்சாத்திட்டனர்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கையின் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச இந்தியத் தூதரக அதிகாரிகள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அதேவேளை, கடந்த 11, 12 ஆம் திகதிகளில் இலங்கைப் பிரதமரின் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த மாநாட்டின் இறுதித் தீர்மானங்கள் எதுவும் ஊடகங்களுக்கு கூறப்படவில்லை.

எனினும் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் வகையிலான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அம்பாந்தோட்டையில் இந்தியா. அமெரி்க்கா போன்ற நாடுகளும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடிய வசதிகளுக்கும் இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள கடற் பிரதேசங்களின் பாதுகாப்பு, திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்தல் போன்ற விடயங்களும் பேசப்பட்டது என்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த மாநாட்டின் பின்னரான தீர்மானத்தின் அடிப்படையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும் பயணம் செய்யவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூநுகின்றன.

இதேவேளை, இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பாக வரையறை செய்யும் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக இலங்கையின் மூன்றாவது அரசியல் சக்தியான ஜே.வி.பி சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மைத்திரி - ரணில் அரசாங்கத்திடம் உரிய கொள்கை இல்லையென ஜே.பி.வியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

வல்லரசு நாடுகளின் போட்டியினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பாதிப்பு என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஆனால் பூகோள அரசியலின் தாக்கத்தைச் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலையில் தமிழ்த் தரப்பு தடுமாறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், 2009 ஆம் ஆண்டு இன அழிப்புப் போருக்கு மஹிற்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்த, அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் போன்ற நாடுகள், இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தீர்மானங்களை எடுத்தபோது, ஈழத் தமிழர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு கொடுத்த அழுத்தங்கள் என்ன என்பது குறித்து தமிழ்த் தரப்பு கேள்வி எழுப்பவில்லை.

இந்த மாநட்டில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கலந்துகொண்டிருந்தார்.

திருகோணமலை உள்ளிட்ட ஈழத் தமிழர்களின் கடற் பிரதேசங்களை இந்த மூன்று நாடுகளும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வசதியாகப் பயன்படுத்தி வரும் சூழலில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படை யோசனைகள் என்ன என்பது குறித்தும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழத் தரப்புகள் கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பூகோள அரசியலின் தாக்கத்தையும் மாற்றத்தையும் தமிழ்த் தரப்பு சரியாகப் பயன்படுத்த முடியாமல் தடுமாறுவதாகவும், சாதாரண கட்சி அரசியல் செயற்பாடுகளில் மாத்திரமே ஈடுபடுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை. வல்லரசு நாடுகளின் போட்டியினால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பாதிப்பு என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மகரகமவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் பொருத்தமான பொருளாதாரக் கொள்கை இல்லாமையே இந்த நிலைமைக்குக் காரணம் எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆனால், 70 ஆண்டுகால ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைத்து நிலையான அமைதியை ஏற்படுத்தினால், இந்த வல்லரசு நாடுகளின் இலங்கை மீதான ஆதிக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பதை மைத்திரிபால மாத்திரமல்ல சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே புரிந்து கொள்ளவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

வல்லரசு நாடுகளின் இலங்கை தொடர்பான போட்டி, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல. இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்வதற்கு கொழும்பில் இடம்பெற்ற இந்த மாநாடு உதாரணமாக அமையலாம் என்றும் விமர்சகர்கள் கூறுயுள்ளனர்.