வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில்

தமிழ்த் தரப்பினால் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சிகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப செயற்படுமா?

மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு நிபந்தனையி்ன்றி ஆதரவு வழங்கியதால் பாதி்ப்பு - சிவசக்தி
பதிப்பு: 2018 ஒக். 17 20:04
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 17 22:39
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பூகோள அரசியல் தாக்கத்தினால் மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்குள் மோதல்கள் அல்லது முரண்பாடுகள் போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தரப்பு எந்தவிதமான அரசியல் தயாரிப்புகளும் இல்லாமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா - சிவபுரத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தை உள்ளடக்கிய திருகோணமலை, முல்லைத்தீவுக் கடற் பிரதேசங்களில் அமெரிக்கா எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றது.
 
இதற்கு இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. அதேவேளை, கொழும்பு, அம்பாந்தோட்டைத் துறைமுகங்கள் தொடர்பான பயன்பாடுகள், பாதுகாப்புகள் குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துமுள்ளன.

தற்போதைய பூகோள அரசியல் சூழலையும் கருத்திற்கொண்டு புதிய அரசியல் கட்சிகளை அல்லது புதிய அணியை உருவாக்குவார்களா என்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோரை உள்ளடக்கிய அவர்கள் சார்ந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த சூழலில், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தோ்தலும், அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2020 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலும் வரவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குலக நாடுகளினால் உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிபந்தனையின்றி இன்றி ஆதரவை வழங்கி வந்தது.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணையவுள்ளாரா? அல்லது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் இருத்த அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முற்படுகின்றனவா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதாவது அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் ஆகிய நாடுகளின் பூகோள அரசியல் செயற்பாடுகளுக்கு ஏற்ப தென்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்தும் வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இருந்து இன்று வரை தமிழ்த் தரப்பு எந்தவிதமான தயாரிப்புகளும் இன்றி வெறுமனே சாதாரண கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ளதால், பூகோள அரசியலின் தாக்கங்களை தமிழ்த் தரப்புக்கு ஏற்ற முறையில் செயற்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

வடமாகாண சபையின் பதவிக்காலமும் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரனும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் இணங்கிச் செல்கின்ற பலர் தம்முடன் இணையவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தது. எந்த நிபந்தனையும் இல்லாமல் மூன்று வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். இவை உங்களையும் உங்கள் கட்சிகளையும் பாதுகாப்பதற்காகவா அல்லது மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து செயற்படப்போகின்றீர்களா என்ற கேள்வியைக் கூட்டமைப்பினரிடம் மக்கள் கேட்க வேண்டும் என சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தினார்.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் உள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 16 வருடங்களாக மக்களை புறந்தள்ளிவிட்டு சுயநலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். ஆகவே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அவரது கரங்களைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அவர் இன்று எமது மக்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காவும் உறுதியாக குரல்கொடுத்துக்கொண்டிருப்பவர். ஆகவே அவரது கரங்களைப் பலப்படுத்தி அடுத்து முக்கிய மாற்று அரசியல் அணியொன்றினை உருவாக்குவோம் என நம்பிக்கை வெளியிட்டார்.

சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லது அரசாங்கத்துக்கு முண்டு கொடுக்கும் ஆட்களாக போகின்றனர் என்பதுக்காக நாம் இதில் இருந்து ஒதுங்க முடியாது.

தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமையொன்று தேவை. அதனை நாம் வெகு விரைவில் உங்களது ஒத்துழைப்போடு உருவாக்குவோம். அதற்கான வேலைகளை நாம் மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய கட்சியில் தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன் விரும்பும் அரசியல் களம் ஒன்று அழிந்து செல்கின்ற காரணத்தினால் ஜனநாயக ரீதியாக தாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்களின் நம்பிக்கையை வென்ற அரசியல் தளம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர், விரைவில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர் புதிய கட்சியை உருவாக்கும் கருத்துக்களை முன்வைத்துள்ளார். எவ்வாறாயினும் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய அரசியல் கட்சிகள் பூகோள அரசியல் நிலைக்கு ஏற்ப செயற்படுமா? அல்லது வழமைபோன்று இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தையும் அதில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சிகளை மாத்திரம் நம்பி செயற்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தற்போதைய பூகோள அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு புதிய அரசியல் கட்சிகைளை அல்லது புதிய அணியை உருவாக்குவார்களா என்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன் ஆகியோரை உள்ளடக்கிய அவர்கள் சார்ந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டும் என விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.