நிரல்
ஜூலை 13 15:02

இலங்கை அமைச்சர்கள் நிற்கும்போதே வாள்வெட்டு, சம்பவ இடத்திற்கும் பொலிஸார் வரவில்லை- உறவினர்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகத்தில் இடம்பெறும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைகள், போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச்செயல்களுக்கு இலங்கைப் படையினர் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர். ஆனால் இலங்கைப் படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இந்த நிலையில் யாழ் கொடிகாமத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளது. கொடிகாமத்தில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவித்தபோதும் இன்று காலை ஒன்பது மணி வரை பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வரவேயில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.
ஜூலை 12 22:32

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? உண்மையை வெளிப்படுத்துமாறு கொழும்பில் கோஷம்

(வவுனியா, ஈழம் ) வடக்கு-கிழக்குத் தமிழர் தாயகத்திலும் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பிரதேசங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டுத் தரவேண்டும் என்றும், இல்லையேல் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி கொழும்பில் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்புகள், பொது நிறுவனங்கள். இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கனக்கான மக்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இன்று பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பித்த போராட்டம் நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
ஜூலை 12 16:24

சிறுவர்களின் எலும்புகளும் மீட்பு, மேலும் ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகத்தில் போர் இடம்பெற்ற காலத்து மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என நம்பப்படும், மன்னார் நகர நுழைவாசலில் உள்ள மனிதப் புதைபுகுழி அகழ்வுப் பணி, இன்று வியாழக்கிழமை 32 நாளாகவும் இடம்பெறுகின்றது. இதுவரை வரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், ஏனையவை பகுதி அளவாகவும் மீட்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட நிலையில், மன்னார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பாதுகாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பாதுகாப்பான முறையில் பொதியிடப்பட்ட மனித எலும்புக் கூடுகள் நீதிமன்ற உத்தரவுடன் மேலதிக ஆய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படலாம் எனவும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 11 23:01

உள்ளூராட்சி சபைகளுக்குரிய மக்களின் பணத்தை இலங்கைப் படையினர் சுரண்டுவதாகக் குற்றச்சாட்டு

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணம் பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள இலங்கைக் கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணம் வலி.மேற்குப் பிரதேச சபையால் செலுத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ந.பொன்ராசா ஆதாரத்துடன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைப் படையினர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் உள்ளூராட்சி சபைகளுக்குரிய மக்களின் பணத்தில் இருந்து தமக்குத் தேவையான மின்சார மற்றும் நீர்க்கட்டணங்களை பெற்றதாக உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணனும் கூறினார். பொதுமக்களின் பணத்தை இலங்கைப் படையினர் எந்த அடிப்படையில் பெறுகின்றனா் என்பது குறித்து சபையில் வாதப்பிரதி வாதம் ஏற்பட்டது.
ஜூலை 11 15:02

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஜெனீவாவில் இல்லை- சங்கத் தலைவி அமலநாயகி

(மட்டக்களப்பு, ஈழம்) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் ஐக்கிய நாடுகள் சபையின், ஜெனீவா மனித உரிமைச் சபையில் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் தலைவி அமலநாயகி அமல்ராஜ் கூறியுள்ளார். கொழும்பை மையப்படுத்தி செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகத்தில், தமக்கு நம்பிக்கை இல்லையென்றும், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மட்டக்களப்பில் நடைவெறவுள்ள அந்த அலுவலகப் பிரதிநிதிகளின் விசாரணைகளை புறக்கணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 11 07:41

கிருஸ்ணா படுகொலை செய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள்- ஆதரவாளர்கள் சந்தேகம்

(வவுனியா, ஈழம் ) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணப்பிள்ளை கிருபானந்தன் படுகொலை செய்யப்பட்டமைக்குப் போதைப் பொருள் வியாபாரமே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என அவருடைய ஆதரவாளர்கள் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளனர். கிருஸ்ணா என அழைக்கப்படும் கிருஸ்ணப்பிள்ளை கிருபானந்தன் கொழும்பில் திங்கட்கிழமை காலை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்கொல்லப்பட்டார். 40 வயதான கிருஸ்ணா, சிறுவயதில் இருந்து கொழும்பில் வாழ்ந்து வருகின்றார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேற்சைக்குழுவாக போட்டியிட்டு கொழும்பு மாநாகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ஜூலை 10 19:39

தொல்லை கொடுத்த இலங்கை இராணுவச் சிப்பாயைக் காப்பாற்ற முற்பட்ட பொலிஸார்

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளைத் தடுக்க இலங்கை இராணுவம் முற்று முழுதாக வெளியேற வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் கூறிவருகின்றனர். அதேவேளை இலங்கைப் படையினரை மறுசீரமைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் மைத்திரி- ரணில் அரசாங்கம் முன்னெடுக்கவில்லயென சித்தரவதைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் (Freedom from Torture) என்ற சர்வதேச அமைப்பும் கூறியுள்ளது. இலங்கை இராணுவத்தை வெளியேற்றி காணி. பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், இளைஞர்கள் மத்தியில் திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டுள்ள வன்முறைகளைத் தடுக்க முடியும் என முதலமைச்சர் விக்னேஸ்வரனும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியிருந்தார்.
ஜூலை 10 14:39

நவாலி ஆலயங்கள் மீதான தாக்குதல் நினைவுகள்- இனப்படுகொலை விசாரணைக்கு வலியுறுத்திய மக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது 1995ஆம் ஆண்டு, யூலை ஒன்பதாம் திகதி, தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட விமானக் குண்டு வீச்சில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்ட நினைவு வணக்க நிகழ்வு, அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. இன அழிப்பு நோக்கில் தொடர்ச்சியாக 13 குண்டுகள் வீச்ப்பட்டிருந்தன. இந்தத் தாக்குதலில் 150 பேர் வரை காயமடைந்தனர். இன்றுவரை இலங்கை அரசாங்கத்தின் எந்தவிதமான உதவிகளும் இன்றி சிரமங்களுடன் காயமடைந்தவர்கள் வாழ்ந்து வருவகின்றனர். பலர் புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று விட்டனர்.
ஜூலை 09 11:29

சட்டவிரோத மண் அகழ்வுக்கு இலங்கைப் பொலிஸார் காரணம்- தடுக்க முடியவில்லை என்கிறார் பிரதேச செயலாளர்

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் மக்களின் தாயகமான மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வடமேற்காக 34 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க முடியவில்லை என பிரதேச செயலாளர் ராஜ்பாபு தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் மணல் அகழ்வு செய்வதற்கு எவ்விதமான அனுமதியும் வழங்கவில்லை. சட்டத்திற்கு முரணாக இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்தக் கோரி இலங்கைப் பொலிஸாருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜூலை 09 11:20

துறைமுக அபிருத்தி என்ற போர்வையில் வாழைச்சேனையில் கனிய வளங்கள் அபகரிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ் பேசும் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை விரிவுபடுத்தல் என்ற போர்வையில் அகழ்வு செய்யப்படும் மணல், கொழும்பு மற்றும் வெளிநாடுகளுக்கு தொடர்ச்சியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இல்மனையில் கனியத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தொடர்ந்து மணல் அகழ்வு செய்யப்படுவதாக நாசிவன்தீவு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் க. பரமேஸ்வரன் தெரிவித்தார். துறைமுகத்தில் மணல் அகழ்வு செய்யப்படுவதால், நாசிவன்தீவு கிராமத்தில் மண் அரிப்பு ஏற்படுகின்றது. இதனால் மக்களின் குடிநீருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.