செய்தி: நிரல்
ஓகஸ்ட் 15 10:48

வாகரைப் பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாவதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாட்டமடு கிராமத்தில் கடந்த 10ஆம் திகதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையின் தாக்கத்தினால் இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாரிமுத்து என்ற கிராமவாசி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 14 17:40

சீனாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு இருந்தாகக் கூறி அல்லைப்பிட்டி கப்பல்த்துறையில் சீன நிபுணர்கள் ஆய்வு

தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், சில அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைந்த மைத்திரி- ரணில் அரசாங்கம், தற்போது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கப்பல்த்துறைப் பகுதியில் சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஆய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமான வர்த்தகத் தொடர்புகள் ஆயிரத்தி இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தாகக் கூறி, இந்த ஆய்வில் கடந்த ஐந்து நாட்களாக ஆராய்ச்சியில் சீன ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அவர்களோடு இணைந்துள்ளனர்.
ஓகஸ்ட் 14 15:16

தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாகவும் உண்ணாவிரதம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகவும் இருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதியான முறையில் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் இடம்பெறுகின்றது. இதற்கு ஆதரவாக அருகில் உள்ள ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்கள், இன்று செவ்வாய்க்கிழமை தலவாக்கலை- டயகம பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இருவரையும் சவப்பெட்டிகளில் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஓகஸ்ட் 14 09:47

முல்லைத்தீவில் மீனவர்களின் உபகரணங்கள் தீயிடப்பட்டன- இலங்கை இராணுவம் குவிப்பு, பிரதேசத்தில் பதற்றம்

(முல்லைத்தீவு, ஈழம்) தமிழர் தாயகமான முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. தென்பகுதி சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவுக் கடலில் அனுமதியின்றியும் சட்டவிரோதமாகவும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சில வாரங்ளாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி இலங்கை அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் குழு ஒன்று முல்லைத்தீவுக்குச் சென்று மீனவர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ் மீனவாக்ளின் வளங்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
ஓகஸ்ட் 13 18:58

கோவில் குளத்தில் மரமுந்திரிகைச் செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு கோவில்குளம் பகுதியில் மரமுந்திரிகைச் செய்கைக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.ராசா குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோவில்குளம் மற்றும் தாழங்குடா பகுதியில் மரமுந்திரிகைச் செய்கைக்காக சுவர்ணபூமி மூன்று ஏக்கர் திட்டத்தின் கீழ் சுமார் நூறு ஏக்கர் காணி ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு, மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தினால் முந்திரிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டு செய்கை பண்ணப்பட்டது.