நிரல்
ஒக். 04 22:09

வாழைச்சேனையைச் சேர்ந்த இளம் பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்- கணவன் முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) கட்டாரில் மூன்றாண்டுகளாக பணி புரிந்து தாயகம் திரும்பிய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் முறையிட்டுள்ளார். மட்டக்ககளப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 71 பி, கருணைபுரம் வாழைச்சேனை என்ற முகவரியில் வசிக்கும் 28 வயதான கோபாலகிருஷ்ணப்பிள்ளை நந்தினி, கடந்த 2015.09.12 அன்று கட்டார் நாட்டுக்கு வீட்டுப்பணிப் பெண்ணாக சென்றிருந்தார். மூன்று வருடங்கள் கடந்த நிலையில் 13.09.2018 அன்று தாயகம் திரும்பியபோதே காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக கணவர் சிவநாதன் சிவரூபன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
ஒக். 04 09:40

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்துடன் வீதியைக் கடக்கும் மக்கள்- யாரும் கவனிக்கவில்லையென விசனம்

(கிளிநொச்சி, ஈழம்) இன அழிப்புப் போர் என்று ஈழத்தமிழர்களால் வர்ணிக்கப்படுகின்ற போர் 2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த பின்னர் திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் தங்கியிருந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியதைத் தொடர்ந்து வடபகுதிக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சிக்கான புகையிரத சேவை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு போக்குவரத்து இடம்பெற்றுவருகின்ற போதிலும் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் இதுவரை அமைக்கப்படவில்லை. குறிப்பாக ஆனந்தபுரம் கிராமத்தையும் கிளிநொச்சி நகர்ப்பகுதியையும் இணைக்கும் புகையிரதக் கடவை புனித திரேசா பெண்கள் கல்லூரிக்குச் செல்லும் புகையிரதக் கடவை உட்பட பல முக்கிய கடவைகள் பாதுகாப்பற்றவையாக காணப்படுகின்றன.
ஒக். 04 06:58

அடுத்த நிதியாண்டுக்கான துண்டுவிழும் தொகை 644 பில்லியன்-கடன் பெறவேண்டிய நிலை என்கிறார் மங்கள

(மன்னார், ஈழம்) இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்காக 2019ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இரண்டாயிரத்தி 57 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான மொத்த செலவு 3982 பில்லியன் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2017 ஆண்டோடு ஒப்பிடும்போது இது ஆயிரத்தி 259 பில்லியன் ரூபாய்களினால் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த வருடத்தைவிட 46 வீத அதிகரிப்பாக இருந்தது. 2018 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் 2175 பில்லியன் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் கிடைக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தார்.
ஒக். 03 12:42

வாகரையில் காணி அபகரிப்புத் தொடர்பாகப் பேசுவதை அமைச்சர் ஒருவரின் அதிகாரிகள் தடுப்பதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் தமிழ் மக்களின் வயல்காணிகள், மேட்டுநிலக் காணிகள், குடியிருப்பு காணிகள் வேறு இனத்தவர்களினால் அபகரிகப்படுகின்றன. காணி்கள் அபகரிக்கப்படும் இடங்களுக்குச் சென்று சுமுகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கும் வேளையில், கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் அதிகாரிகள் சிலரால் அச்சுறுத்தப்படுவதாக வாகரை பிரதேச சபை உறுப்பினர் சிறில் அண்டன் தெரிவித்தார்.நேற்றுச் செவ்வாய்கிழமை வாகரையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்திலும் சில அதிகாரிகள் தன்னை அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார். காணி அபகரிப்புத் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லையென்றும் உரத்த தொனியில் அதட்டிக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒக். 03 10:00

அனுராதபுரம் சிறையில் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது. கொழும்பு மகசீன் சிறையிலும் 42பேர் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசினால் சிறைச்சாலைகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஈழத்தமிழரின் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட கொழும்பிலும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இன்று புதன்கிழமை முதல் கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 42 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளருக்கு அவர்கள் எழுத்துமூலம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர். கன்டி போகம்பர சிறைச்சாலையில் ஆறு கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஒக். 02 20:38

ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் சென்ற 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களும் எதிர்வரும் நான்காம் திகதி வியாழக்கிழமை வரை தங்கி நிற்கவுள்ளன.
ஒக். 02 15:02

மட்டக்களப்பு வாகனேரியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் கையளிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு வாகனேரியில் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலளார் பிரிவுக்குட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறிய கிராமங்கள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. வாகனேரி தமிழ் கிராமத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, சுற்றிவளைப்பில் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் என்று 87 தமிழ், இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஒக். 02 07:41

வாகரையில் காணிகளை அபகரிக்க இலங்கை இராணுவம் முயற்சி வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெறப்பட்டதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) வாகரை மக்கள் குடியிருந்த காணியை, இலங்கை அரச காணி எனக் கூறி அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி மற்றும் ஊரியன் கட்டு ஆகிய கிராம சேவகர் பிரிவில் 56 குடும்பங்களின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படையின் 233 ஆவது பிரிவு, மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் வான், கடல் மற்றும் தரைவழி என முப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து வாகரையில் குடியிருந்த சுமார் 7500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தன.
ஒக். 02 02:52

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நீரகக்கரிம (hydrocarbon) முற்றாய்விற்கென 55 இடங்களை இந்திய அரசு வளைத்துள்ளது

(சென்னை, தமிழ்நாடு) 5900 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய ஒன்றியத்தினுள் 55 பகுதிகளை எண்ணெய் மற்றும் வாயுக்கள் (Oil and gas exploration) முற்றாய்வுக்கென ஒதுக்கியுள்ளதாக, கல்லெண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் (Petroleum and natural gas) தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் (ஒக்டோபர் 1, 2018). இதில், 41 பகுதிகளை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. வட இந்தியாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கப் போராடிய பழங்குடி மக்களுக்கு எதிரான பச்சை வேட்டை உட்பட தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் தமிழர்களை சுட்டுக்கொன்றது என இந்திய ஒன்றிய அரசு நடத்தியது அனைத்தும் இதே வேதாந்தா நிறுவனத்தின் நலனுக்காகத்தான் என தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன் கூர்மைக்கு தெரிவித்தார்.
ஒக். 01 18:39

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மழை காரணமாக இடைநிறுத்தம்- கூடாரம் அமைக்கத் தீர்மானம்

(மன்னார், ஈழம்) மன்னார் சதோச புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒரு வாரத்தின் பின்னர் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று பெய்த திடீர் மழை காரணமாக கூடார வசதியின்மையினால் அகழ்வுப் பணிகள் தடைப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த 24 ஆம் திகதி போயா தினத்திலிருந்து இன்று முதலாம் திகதி வரை மன்னார் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட நீதவான் தலைமையில் நடைபெற்றிருந்தது. எதிர்வரும் காலங்களில் பருவமழை பெய்யவுள்ள நிலையில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.