செய்தி: நிரல்
ஒக். 15 15:31

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்கின்றது - முதலாளிமார் சம்மேளனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) இலங்கையின் மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹட்டன் ஸ்டிரதன், மஸ்கெலியா கிலண்டில், கொட்டகலை மேபீல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்கள், ஆயிரம் ரூபாய்கள் அடிப்படை சம்பள உயர்வு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். முதலாளிமார் சம்மேளனத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
ஒக். 14 12:17

நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் மிரட்டல்-

(வவுனியா, ஈழம் ) தமிழ் மக்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் மாபெரும் போராட்டங்கள் வலுப்பெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழ் மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் குழு ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வழமை போன்று வாக்குறுதியளித்துள்ளார்.
ஒக். 12 21:50

அநுராதபுரத்துக்குள் நுழைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி

(வவுனியா, ஈழம்) வழக்கு விசாரணைகளின்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடுதலை கோரிய நடைபவனி இலக்கு எல்லையான அநுராதபுரத்தின் எல்லையைச் சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டன நடைபவனியை ஆரம்பித்தனர்.
ஒக். 12 12:59

யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலும் மண்டையோடுகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சாட்சியாக ஈழத்தின் பல பகுதிகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுவருகின்றன. மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடு மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அதிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி - பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது கை, கால் மற்றும் மண்டையோடு என்பனவும் மனித எலும்புகள் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஒக். 12 07:07

மன்னாரில் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களினால் பலர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கொழும்பை தலைமையகமாகக் கொண்டு மன்னாரில் கிளை அமைத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்கடன்களைப் பெற்று தினமும் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தென்னிலங்கையைத் தலைமையமாகக் கொண்டுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மன்னாரில் இயங்கி வருகின்றன. இந்நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து பல்வேறு வகையான கவர்ச்சிகர நுண்கடன் திட்டங்களை அமுல்படுத்தி பெண்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் அதிக வட்டியுடன் வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் கடனாளிகளிடமிருந்து அறவிடப்படுகின்றன.
ஒக். 10 22:10

கிளிநொச்சி- பூநகரியில் ஆறாயிரம் ஏக்கர் உவர் நிலமாக மாறியுள்ளது என்கிறார் அரச அதிபர்- பிரதேச மக்கள் கவலை

(கிளிநொச்சி, ஈழம்) இன அழிப்புப் போரின் 2009 ஆம் ஆண்டின் பின்னரான சூழலில் ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள வளங்கள் உட்பட காணிகள் சூறையாடப்பட்டுவருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு உவர் நிலமாக மாறியுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். பூநகரிப் பிரதேசத்தில் குடிநீர் என்பது அரியதொரு வளமாக மாறிவருவதனால் இதனைப் பெற்றுக்கொள்வதற்கு அப்பகுதி மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதிகளவான பயிர்ச்செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியமையே இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒக். 10 20:30

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சுத்திகரிப்பு ஊழியர் வைத்தியசாலையில் அனுமதி

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில், கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்காகச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வாழைச்சேனை பிரதேச சபையில் சுத்திகரிப்பாளராக கடமையாற்றும் வாழைச்சேனை - விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான, 48 வயதுடைய கணேசன் என அழைக்கப்படும் பழனியாண்டி முனியாண்டி என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
ஒக். 10 14:06

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரவும்- சிவசக்தி ஆனந்தனிடம் வேண்டுகோள்

(மன்னார், ஈழம்) மைத்திரி- ரணில் அரசாங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை நிபந்தனையாக முன்வைத்து வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் கைதிகள் கூறியுள்ளனர். கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளை இன்று புதன்கிழமை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கைதிகள் கேட்டுகொண்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
ஒக். 10 10:59

காஞ்சிரன்குடா படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுட்டிப்பு

ஈழத்தமிழரின் பாரம்பரியத் தாயகமான வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படையினரை அதீத பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட ஏழு பேரின் 16 ஆவது ஆண்டு படுகொலை நினைவேந்தல், அம்பாறை- திருக்கோவில் பகுதியில் அனுட்டிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில், திருக்கோவில் 02 சுப்பர் ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நினைவேந்தல் இடம்பெற்றது.
ஒக். 10 00:19

மன்னார் மாவட்டத்தில் பெருமளவு காணிகள் சட்டத்திற்கு முரணாக அபகரிப்பு- மக்கள் முறைப்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் நீரேந்து பிரதேசங்களுக்கு அருகாமையில் உள்ள பெருமளவு புலவுக்காணிகள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான குடிநிலக்காணிகளும் விவசாய நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு கொழும்பு அரசியல் செல்வாக்குடன் ஒரு சில தமிழ் பேசும் அரச அதிகாரிகளும் கிராமசேவையாளர்களும் உடந்தையாக செயற்படுவதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகமான மன்னார் மாவட்டத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வசித்து வரும் குடும்பங்களின் காணிகளும் தோட்டக்காணிகளும் விவசாய நிலங்களுமே அபகரிக்கப்படுவதாக அயல் கிராமங்களில் வாழும் மக்கள் கூறுகின்றனர்.