நிரல்
ஒக். 16 23:16

மட்டக்களப்பு ஓமடியாமடு கிராமத்தில் கடும் வெப்பத்தினால் பயன்தரும் கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் கவலை

(மட்டக்களப்பு, ஈழம்) கால்நடைகளுக்கான வைத்தியர் இல்லாமையினால் வாய்ப்புண் மற்றும் குர நோய்களினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் உள்ள கால்நடைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உரிமையார்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ஓமடியாமடுவில் கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தினால் வாய்ப்புண் மற்றும் குரநோய்களினால் அதிகளவான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட இக் கிராமத்தை யாரும் கவனிப்பதில்லையென பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒக். 15 22:03

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேறவில்லை

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வர பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் சுமார் 30 வருடங்களாக கையளிக்கப்படாத நிலையில் காணிகளின் சொந்தக்காரர்களில் அநேகர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி, நாகதாழ்வு, பள்ளமடு, பெரியநாவற்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய போர் காரணமாக தமது தாயகப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி மன்னார் நகரிலும் வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர்ந்தனர். இதன் காரணத்தினால் இந்தக் கிராமங்கள் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன.
ஒக். 15 21:24

சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கியமையை எதிர்த்து கண்டனப் பேரணி

(வவுனியா, ஈழம்) சபரிமலை ஐயப்ப சுவாமிகளைத் தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி பஜார் வீதி வழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர். 10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர்நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளைத் தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒக். 15 15:31

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டம் தொடர்கின்றது - முதலாளிமார் சம்மேளனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம்) இலங்கையின் மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான உடன்படிக்கை 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹட்டன் ஸ்டிரதன், மஸ்கெலியா கிலண்டில், கொட்டகலை மேபீல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள தொழிற்சங்கங்கள், ஆயிரம் ரூபாய்கள் அடிப்படை சம்பள உயர்வு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர். முதலாளிமார் சம்மேளனத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
ஒக். 15 00:04

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்புத் தொடர்பான மாநாட்டின் பின்னர் மைத்திரி சீனாவுக்கும் ரணில் டில்லிக்கும் பயணம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளின் கப்பல்களும் வந்து செல்லக்கூடிய முறையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் செய்திருந்தபோது கூறியிருந்தார். இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்கள், வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்குரியவாறு தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையின் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் பியால் டி சில்வா கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.
ஒக். 14 12:17

நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் மிரட்டல்-

(வவுனியா, ஈழம் ) தமிழ் மக்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான போராட்டங்கள் ஓயப்போவதில்லை என்று தெரிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள், தமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் மாபெரும் போராட்டங்கள் வலுப்பெறும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட தமிழ் மாணவர்களுக்கு சிங்கள இளைஞர்கள் குழு ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது. மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றுச் சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்து வழமை போன்று வாக்குறுதியளித்துள்ளார்.
ஒக். 13 15:08

சிவசக்தி ஆனந்தனுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பத்து மாதங்களுக்கும் மேலாகப் பேச்சுரிமை மறுப்பு

(வவுனியா, ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கூட்டமைப்பில் இருந்து விலகியதால் இலங்கை நாடாளுமன்றத்தில் உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து அவர் எதிர்க்கட்சி வரிசையில் தனித்து இயங்கி வருகின்றார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அவருக்கு உரையாற்றுவதற்கான நேரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வழங்க மறுத்துள்ளது. இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் நான்கு தடவைகள் நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சிறப்புரிமைப் பிரச்சனையை முன்வைத்து தனக்குரிய நேர ஒதுக்கீடு தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சபாநாயகர் கருஜெயசூரிய நடவடிக்கை எதையுமே எடுக்கவில்லை.
ஒக். 12 21:50

அநுராதபுரத்துக்குள் நுழைந்தது பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி

(வவுனியா, ஈழம்) வழக்கு விசாரணைகளின்றி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடுதலை கோரிய நடைபவனி இலக்கு எல்லையான அநுராதபுரத்தின் எல்லையைச் சென்றடைந்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பரமேஸ்வரன் ஆலய முன்றலிலிருந்து கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஒன்றுகூடிய மாணவர்கள், அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் கண்டன நடைபவனியை ஆரம்பித்தனர்.
ஒக். 12 12:59

யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலும் மண்டையோடுகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சாட்சியாக ஈழத்தின் பல பகுதிகளில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுவருகின்றன. மன்னாரில் தொடர்ச்சியாக எலும்புக்கூடு மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அதிலிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி - பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தைத் தோண்டியபோது கை, கால் மற்றும் மண்டையோடு என்பனவும் மனித எலும்புகள் கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஒக். 12 07:07

மன்னாரில் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்களினால் பலர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கொழும்பை தலைமையகமாகக் கொண்டு மன்னாரில் கிளை அமைத்துள்ள நிதி நிறுவனங்களின் நுண்கடன்களைப் பெற்று தினமும் பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். தென்னிலங்கையைத் தலைமையமாகக் கொண்டுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மன்னாரில் இயங்கி வருகின்றன. இந்நிதி நிறுவனங்கள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்து பல்வேறு வகையான கவர்ச்சிகர நுண்கடன் திட்டங்களை அமுல்படுத்தி பெண்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்கப்படும் கடன்கள் அதிக வட்டியுடன் வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் கடனாளிகளிடமிருந்து அறவிடப்படுகின்றன.