செய்தி: நிரல்
ஒக். 16 23:16

மட்டக்களப்பு ஓமடியாமடு கிராமத்தில் கடும் வெப்பத்தினால் பயன்தரும் கால்நடைகள் உயிரிழப்பதாக மக்கள் கவலை

(மட்டக்களப்பு, ஈழம்) கால்நடைகளுக்கான வைத்தியர் இல்லாமையினால் வாய்ப்புண் மற்றும் குர நோய்களினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் உள்ள கால்நடைகள் பல நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உரிமையார்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான ஓமடியாமடுவில் கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தினால் வாய்ப்புண் மற்றும் குரநோய்களினால் அதிகளவான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட இக் கிராமத்தை யாரும் கவனிப்பதில்லையென பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒக். 16 10:17

காஞ்சூரமோட்டையில் குடியேறும் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

வவுனியா- காஞ்சூரமோட்டை பகுதியில் குடியேறும் மக்களுக்கும், மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளுக்கும் இல்ங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாதுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமக்கு உரியவை எனத் தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஒக். 16 05:15

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி - ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இழப்பீடுகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாக இருந்தபேபாதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் காணாமல் போன உறவினர் ஒருவரின் சகோதரி ச.சங்கீத்தா தெரிவித்துள்ளார்.
ஒக். 15 22:03

மன்னார் - திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவம் வெளியேறவில்லை

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வர பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் சுமார் 30 வருடங்களாக கையளிக்கப்படாத நிலையில் காணிகளின் சொந்தக்காரர்களில் அநேகர் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். மன்னார் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட திருக்கேதீஸ்வரம், எள்ளுப்பிட்டி, நாகதாழ்வு, பள்ளமடு, பெரியநாவற்குளம் ஆகிய பாரம்பரிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய போர் காரணமாக தமது தாயகப் பிரதேசங்களில் இருந்து வெளியேறி மன்னார் நகரிலும் வேறு மாவட்டங்களிலும் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கும் இடம்பெயர்ந்தனர். இதன் காரணத்தினால் இந்தக் கிராமங்கள் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தன.
ஒக். 15 21:24

சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கியமையை எதிர்த்து கண்டனப் பேரணி

(வவுனியா, ஈழம்) சபரிமலை ஐயப்ப சுவாமிகளைத் தரிசனம் செய்வதற்கு இளம் பெண்களுக்கு அனுமதி வழங்கிய இந்திய உயர் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஐயப்ப பக்தர்களால் இன்று வவுனியாவில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வன்னி மாவட்ட ஐயப்ப சுவாமிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவில் முற்றலில் ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி பஜார் வீதி வழியாக சென்று அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்தனர். 10 வயது தொடக்கம் 55 ஐந்து வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என்ற விதிமுறையை மீறி இந்திய உயர்நீதிமன்றம் அனைத்து பெண்களும் சபரிமலை சென்று ஐயப்ப சுவாமிகளைத் தரிசிக்க முடியும் என வழங்கிய தீர்ப்பினை மீளப்பெறக் கோரி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.